பீமன் கட்டிய பீமலிங்கேஸ்வரா கோவில்

ஷிவமொக்கா மாவட்டம், பட்கல் - கார்கல் சாலையில் பீமேஸ்வரா என்ற சிறிய கிராமம் அமைந்து உள்ளது. இக்கிராமத்தில் நீர்வீழ்ச்சியின் மிக அருகிலேயே 'பீமலிங்கேஸ்வரா கோவில் உள்ளது.

புராணங்கள்படி, பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வன வாசம் மேற்கொண்டனர். மஹா சிவராத்திரியின் போது பூஜை செய்ய, பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் விரும்பினார்.

இதை கேட்ட பீமன், இங்கு சிவலிங்கம் வைத்தாராம். சிவனுக்கு பூஜை செய்ததால், சிவனை பீமேஸ்வரா என்று அழைக்கின்றனர். '

அர்ஜுனன், அம்பு எய்து தண்ணீர் வரவழைத்தார். இந்த தண்ணீர் அருவி போன்று கொட்டியது. இதனால், 'பீமேஸ்வரா நீர்வீழ்ச்சி' என்று அழைக்கின்றனர்.

இந்த நீர்வீழ்ச்சி, கோடைகாலத்திலும் வறண்டதே இல்லை என்று கூறப்படுகிறது. ஹொய்சாளர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது.

பீமேஸ்வரா கிராமத்தில் இருந்து சிறிது துாரம் நடந்து செல்ல வேண்டும். வழியில் பல நீர் ஓடைகளை பார்க்கலாம். இவ்வாறு செல்லும் போது, சராவதி வனப்பகுதி சரணாலயத்தை ரசித்தபடி செல்லலாம்.

நீர்வீழ்ச்சியின் அருகில் 50 அடி உயரத்தில் சிறிய இடத்தில் பீமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும்.

அருகிலேயே நீர்வீழ்ச்சி இருப்பதால், படிக்கட்டுகளில் நீர்த்துளிகள் பட்டு ஈரமாக காணப்படும். எனவே, கவனமாக ஏற வேண்டும்.

மஹா சிவராத்திரி அன்று இப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் இருந்து மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தினமும் காலை 6:00 முதல் மாலை 5:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

எப்படி செல்வது?



பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 151 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.


ரயில், பஸ்சில் செல்வோர், பட்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, 43 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு செல்லலாம்

- நமது நிருபர் -.

Advertisement