பெங்களூரின் காவல் தெய்வம் அன்னம்மா தேவி

முன்னொரு காலத்தில், 'பெந்தகாளூர்' என அழைக்கப்பட்ட பெங்களூரு, இன்று பல மாற்றங்களை சந்தித்துள்ளது. சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான நகரங்களில் பெங்களூரும் ஒன்றாகும். இங்கு சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி, புராதன கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. இவற்றில் அன்னம்மா கோவிலும் முக்கியமானதாகும்.
பெங்களூரின் பரபரப்பான வர்த்தக பகுதியான காந்தி நகரில் அன்னம்மா கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டுள்ள அன்னம்மா தேவி, பெங்களூரின் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். திருமண தடை உள்ளவர்கள், தங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும் என, அன்னம்மா தேவியிடம் வேண்டி கொள்வர். திருமணம் கை கூடினால், தம்பதி சமேதராக கோவிலுக்கு வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர்.
திருமண ஆண்டு விழாவை, அன்னம்மா கோவிலில் கொண்டாடுவோரும் உண்டு. பச்சிளம் குழந்தைகளூக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால், இங்கு அழைத்து வந்து அம்பாள் முன் படுக்க வைத்து வேண்டுகின்றனர். உடனடியாக சரியாகும் என்பது ஐதீகம். கோவிலுக்கு அழைத்து வரப்படும் குழந்தைகள், அம்பாளின் குழந்தையாக கருதப்படுமாம். இந்த இடத்தில்தான் அம்பாள் பிறந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர். பாறையில் அம்பாள் விக்ரகம் செதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக கார், இரு சக்கர வாகனம் உட்பட மற்ற வாகனங்கள் வாங்குவோர், இக்கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்த பின்னரே, பயன்படுத்துவது வழக்கம். தினமும் ஏதாவது ஒரு வாகனத்துக்கு பூஜை நடப்பதை காணலாம்.
நோய்களால் பாதிப்பு ஏற்பட்டால், இங்கு வந்து வேண்டினால் குணமடைகின்றனர். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர், நெய் விளக்கு ஏற்றுகின்றனர்.
பெங்களூரின் சுற்றுப்பகுதிகள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவில் 10ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஜயநகர சாம்ராஜ்யத்தின், இம்மடி கவுடா ஆட்சி காலத்தில், ஹனுமந்த நாயக் என்பவர் இக்கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது.
பெங்களூரை உருவாக்கிய கெம்பேகவுடா, அன்னம்மா தேவியின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் உட்பகுதியை சுற்றிலும், அன்னம்மா தேவியின் வெண்கல சிலைகளை காணலாம்.
ஆண்டுதோறும் திருவிழா, தீமிதி நடக்கிறது. வரலாற்று பிரசித்தி பெற்ற பெங்களூரு கரக உத்சவத்தின் போது, அன்னம்மா தேவிக்கும் பல்லக்கு ஊர்வலம் நடக்கும். நவராத்திரி நேரத்தில் ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
- நமது நிருபர் -
மேலும்
-
மதுரை சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் துவக்கம்
-
கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு!
-
ராட்சச குடிநீர் குழாயிலிருந்து வீணாகும் தண்ணீர்!
-
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ; விசாரணையில் அம்பலம்!
-
காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் நீக்கம்; சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
-
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரன் ரூ.320 உயர்ந்து விற்பனை