விசாரணை முடிந்ததால் ஜாமின் ரத்து செய்தது ஐகோர்ட்

பெங்களூரு: 'கொலை உள்ளிட்ட கடுமையான வழக்கில் விசாரணை முடிந்துள்ளது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பதற்காக, குற்றவாளிக்கு ஜாமின் அளிப்பது சட்டவிரோதம்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. குற்றவாளிக்கு செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த ஜாமினையும் ரத்து செய்தது.

மாண்டியா நகரைச் சேர்ந்தவர் குமார் என்ற சீம எண்ணே குமார், 35; ரவுடி. சில மாதங்களுக்கு முன்பு, நிலத்தகராறில் தன் சொந்த அண்ணனின் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

கொலை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், மாண்டியாவின் முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

போலீசார் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்ததால், அவருக்கு மாண்டியா நீதிமன்றம் ஜாமின் அளித்தது.

இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு அளித்த ஜாமினை ரத்து செய்யும்படி கோரினர்.

மனு மீது, உயர் நீதிமன்ற நீதிபதி விஸ்வஜித் முன்னிலையில் நேற்று விசாரணை நடந்தது. வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கொலை உள்ளிட்ட கடுமையான வழக்குகளில், விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பதற்காக, குற்றவாளிக்கு ஜாமின் அளிப்பது சட்டவிரோதம். இது நியாயமற்ற நடவடிக்கை.

அது மட்டுமின்றி, வழக்கின் ஐந்தாவது சாட்சியாக உள்ளவரே, குற்றவாளிக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்துள்ளார். இது குற்றவாளி பிராசிகியூஷன் சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு உள்ளதை உணர்த்துகிறது. வழக்கின் புகார்தாரரே, குற்றவாளியின் சொந்த அண்ணன். சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியங்கள் அனைவருமே, குற்றவாளியின் உறவினர்கள்.

ஜாமின் கிடைத்த பின், இந்த சாட்சிகளை குற்றவாளி மிரட்டியது, நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. செஷன்ஸ் நீதிமன்றத்தின் ஜாமின் உத்தரவு, சட்டப்படி இல்லை. குமாருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த ஜாமின் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement