காவல் துறை காலி பணியிடம்; விபரங்களை மறைத்த அரசு

சென்னை: காவல் துறையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த தகவல்கள், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, அரசின் கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெறவில்லை. சட்டசபையில் நேற்று, காவல் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடந்தது.

அதுதொடர்பாக, அரசு தாக்கல் செய்த காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில், சட்டம்-ஒழுங்கு, மகளிர், ரயில்வே என, 1,902 காவல் நிலையங்கள் உள்ளன.

சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு உள்ளிட்ட பணிகளில், போலீசார் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஜன., 1 நிலவரப்படி, 14 டி.ஜி.பி.,க்கள், 18 கூடுதல் டி.ஜி.பி.,க்கள், 44 ஐ.ஜி.,க்கள், 37 டி.ஐ.ஜி.,க்கள், 173 எஸ்.பி.,க்கள் என, 1 லட்சத்து, 33,961 பணியிடங்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், மாநிலம் முழுதும் எத்தனை டி.ஜி.பி.,க்கள் பணியில் உள்ளனர்; ஐ.ஜி., மற்றும் கூடுதல் ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எத்தனை பேர் பணியில் உள்ளனர்; எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற புள்ளிவிபரம் வெளியிடப்படவில்லை.

அதேபோல, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் முதல் டி.எஸ்.பி.,க்கள் வரையிலான காலி பணியிடங்கள் குறித்த தகவல்களும் இல்லை. இதையெல்லாம் அரசு மறைத்து விட்டதாக, போலீசார் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement