டிரினிடாட் பிரதமராகும் இந்திய வம்சாவளி பெண்: மோடி வாழ்த்து

புதுடில்லி: டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா பிரசாத் பிசேசார் வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
கரீபியன் தீவு கூட்டங்களில் ஒன்றான டிரினிடாட் அண்ட் டொபாகா தீவு உள்ளது. இங்கு சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய காங்கிரஸ் கட்சி ஆளும் மக்கள் தேசிய இயக்கத்தை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இக்கட்சியின் தலைவராக உள்ள கமலா பிரசாத் பிசேசார் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். இவர், இதற்கு முன்னர், 2010 முதல் 2015 வரை பிரதமர் பதவி வகித்து உள்ளார். இங்கு பிரதமர் ஆக பதவிவகித்த ஒரே பெண் இவர் ஆவார். அவரது வெற்றியை, ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
யார் இவர்,
கமலா பிரசாத்தின் மூதாதையர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார். அவர்கள் 19 ம் நூற்றாண்டில் தொழிலாளர்களாக இந்த தீவுக்கு வந்தனர். கமலா பிரசாத் டிரினிடாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிபாரியா என்ற இடத்தில் 1952ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
கமலா பிரசாத்தின் இவரது தந்தை வழி முன்னோர்கள் பீஹாரின் பெஹல்பூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தாய் வழி முன்னோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் கொக்கோ மற்றும் கரும்பு விவசாய தோட்டத்தில்பணியாற்றி உள்ளனர். கமலா பிரசாத் டிரினிடாட் டொபாகோவில் படித்த பிறகு லண்டன் சென்று பட்டம் பெற்றார். லண்டனில் பிசேசாரை சந்தித்து, 1973ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு, ஜமைக்கா சென்ற இவர்கள் 14 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்தனர் அங்கு பிஏ பட்டமும், கல்வியில் டிப்ளமோ பட்டமும் பெற்றனர். அங்குள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றினார்.
பிறகு தாய்நாடு திரும்பிய கமலா பிரசாத், 1987 ல் அரசியலில் நுழைந்தார். செயின்ட் பாட்ரிக் கவுன்டி கவுன்சில் உறுப்பினராக 1991 ல் தேர்வானார். 1995ல் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 1995ல் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்ற அவர், பிறகு 2000ம் ஆண்டுகல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
பிறகு 2010 மே மாதம் டிரினிடாட் டொபாகோவின் பிரதமர் ஆக பதவியேற்றுக் கொண்டார்.
2015ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். காமன்வெலத் நாடுகளின் தலைவராகவும் பதவி வகித்து உள்ளார். இந்தியாவிற்கு வெளியே, இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் பிரதமர் இவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு, பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கி கவுரவித்தது.சிறந்த நிர்வாகத்திற்காக சர்வதேச அமைப்புகள் வெளியிட்ட பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
கமலா பிரசாத் , தனது தாயார் மற்றும் பாட்டியை முன்மாதிரியாக கொண்டே, கல்வி, சேவை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை வடிவமைக்க முடிந்தது என்கிறார். கடந்த 2012ம் ஆண்டு, தனது முன்னோர்கள் பிறந்த பீஹாருக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்தார்.
மோடி வாழ்த்து
டிரினிடாட் டொபாகோ பிரதமர் ஆக பதவியேற்க உள்ள கமலா பிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்து நமது பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: தேர்தலில் வெற்றி பெற்ற கமலா பிரசாத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். டிரினிடாட் மற்றும் டொபாகோ உடன் உள்ள வரலாற்று ரீதியான உறவுகளை நாம் கொண்டாடுவோம். நமது மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக நமது ஒத்துழைப்பை பலப்படுத்த இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும்
-
மேலே பாம்பு,கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் தடைகளை தாண்டி சாதித்ததாக முதல்வர் பெருமிதம்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
-
இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்
-
வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
-
கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்
-
சட்ட கல்வியில் தலையிடாதீர்கள்; பார் கவுன்சிலுக்கு கோர்ட் கண்டிப்பு