கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்

8

வேலுார்: வேலுார் மாநகராட்சிக்குட்பட்ட, அம்மனாங்குட்டை மயானத்தில், சடலத்தை எரிக்க கட்டணமாக, 3,500 ரூபாயை மாநகராட்சி நிர்ணயித்த நிலையில், 4,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஊழியராக ராஜேஷ் பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் அப்பகுதி சிந்து, 36, என்ற பெண், மூதாட்டி பார்வதி, 90, ஆகியோரது சடலங்களை எரிக்க, அன்று மாலை அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டன. அப்போது, ராஜேஷ், சடலத்தை வைத்து விட்டு செல்லுமாறும், ஒரு மணி நேரம் கழித்து, அஸ்தியை பெற்று செல்லுமாறும் கூறினார். ஆனால், சடலத்தை எரிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், சந்தேகமடைந்த உறவினர்கள், அவரிடம் தகராறு செய்தனர்.

அவர், 'நீண்ட நாட்களாக எரிவாயு இல்லாததால், சடலம் எரிப்பதில்லை' என, அதிர்ச்சி தகவலை கூறி விட்டு, இரு சடலத்தையும் அப்படியே போட்டு விட்டு தப்பியோடினார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சடலத்தை எடுத்து சென்று புதைத்தனர். பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.

மயானத்தில் நீண்ட நாட்களாக சடலத்தை எரிக்காமல், புதைத்து விட்டு, கழிவுகளை எரிக்கும் சாம்பலை உறவினர்களிடம் கொடுத்து, சடலத்தின் அஸ்தி என ஏமாற்றி வந்தது தெரிந்தது.

வேலுார் தெற்கு போலீசார் மற்றும் வேலுார் மாநகராட்சி அலுவலர் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்தனர்.

Advertisement