மேலே பாம்பு,கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் தடைகளை தாண்டி சாதித்ததாக முதல்வர் பெருமிதம்

2

சென்னை: ''மேலே பாம்பு, கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள்; ஒருபக்கம் மத்திய அரசு, மறுபக்கம் கவர்னர், இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்று தடைகளை கடந்து, அரசு சாதனை நிகழ்த்தியுள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் நடந்த காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, அவர் அளித்த பதிலுரை:

தி.மு.க., ஆறாவது முறையாக ஆட்சியமைத்து, நான்காவது ஆண்டை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொற்காலம் விரைவில் துவங்கப் போகிறது.

இதுவரை செயல்படுத்தி இருக்கும் திட்டங்களால், செய்திருக்கக்கூடிய சாதனைகளால், ஏழாவது முறையும் தி.மு.க., ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. இப்போது கருணாநிதி இருந்திருந்தால், என்னவெல்லாம் செய்திருப்பார் என்று யோசித்து தான் ஒவ்வொரு நாளும் நான் செயல்படுகிறேன்; திட்டங்களைதீட்டுகிறேன்.

தமிழகம் பார்க்காத சாதனை



கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாகச் சீர்கேட்டால், நிர்வாக கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய், கட்டாந்தரையில் தவழ்ந்து கொண்டு இருந்தன. தவழ்ந்து கொண்டிருந்த இந்த இழிவை போக்கி, தலைநிமிர்ந்த தமிழகத்தைஉருவாக்க, மக்கள் தி.மு.க.,வை ஆட்சிபொறுப்பில் அமர்த்தினர்.

மக்களுடைய நம்பிக்கைக்கேற்ப, தமிழகம், இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் தலைநிமிர்ந்து இருக்கிறது என்பதை நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலுடன், பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். இது, சாதாரண சாதனை இல்லை; கடும் உழைப்பால் விளைந்த சாதனை; இதுவரை தமிழகம் பார்க்காத சாதனை.

'நம்பர் ஒன்' மாநிலம்



இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவிலே எந்த மாநிலமும் செய்யாத சாதனை. கடந்த 2024 - -25ம் ஆண்டில், இந்தியாவில், 'நம்பர் ஒன்' மாநிலமாக தமிழகம், 9.69 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதுவரை தமிழக வரலாற்றில், இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்ததில்லை.

இதை நான் சொல்லவில்லை. எல்லா வகையிலும் தமிழகத்திற்கு ஓரவஞ்சனையோடு செயல்படும் மத்திய அரசின் புள்ளி விபரங்களே சொல்லியிருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவினுடைய வளர்ச்சி, 6.5 சதவீதம் தான். தமிழகத்தின் தனிநபர் வருமானம், 2024- - 25ம் ஆண்டில், 3 லட்சத்து, 58,000 ரூபாயாக உள்ளது. இதில், தேசிய சராசரி, 2 லட்சத்து, 6,000 ரூபாய் தான். இதுவரை இல்லாத உச்சமாக, 14.65 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணுபொருட்கள் ஏற்றுமதியில், தமிழகம் கடந்த 2024- - 25ம் நிதியாண்டில் சாதனை படைத்திருக்கிறது.

இதன் வாயிலாக, நான்கு ஆண்டுகளில், 5 லட்சத்து, 80,000 கோடி ரூபாய் வணிக வரியாக வந்திருப்பதே, தமிழகத்தின் வளர்ச்சிக்கான சான்று. அகில இந்திய அளவில், 50 சதவீதம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தான் அறிவியல் ஆய்வக வசதிகள்இருக்கின்றன.

தமிழகத்தில், 98.3 சதவீத பள்ளிகளில் இந்த வசதி இருக்கிறது. கல்வி துறையைப் பொறுத்தவரைக்கும், கடந்த நான்கு ஆண்டுகளில், நம்முடைய அரசு செய்திருக்கக்கூடிய திட்டங்கள் காரணமாக, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றலே இல்லை. இந்திய அளவில், 28.4 சதவீதமாக இருக்கும் உயர் கல்வி சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில், 47 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. பிஎச்.டி., படிக்கிற மாணவர்கள், தமிழகத்தில் தான் அதிகம். மிகச்சிறந்த, 100 பல்கலைகளில் 22 தமிழகத்தில் தான் இருக்கின்றன.

தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை, மத்திய அரசின் பொருளாதார ஆலோசனை குழு அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறது. சமூக முன்னேற்றக் குறியீட்டில், பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழகம், 63.3 புள்ளிகள் பெற்று, தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியா முழுதும், 11.2 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். தமிழத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் 1.43 சதவீதம் பேர்தான் உள்ளனர். எளிய மக்களையும், மருத்துவ சேவைகள் சென்று சேர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட, மக்களை தேடி மருத்துவம் திட்டம் வாயிலாக, 2.25 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.

இதற்கு, ஐ.நா., அமைப்பின் விருது கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், அதிக அளவில் அரசு மருத்துவர்கள் இருக்கின்றனர். அதிகமான எம்.பி.பி.எஸ்., இடங்களும் இங்கு தான் உள்ளன. தமிழக அரசு மருத்துவமனைகளில், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 733 மருத்துவ படுக்கைகள் இருக்கின்றன.

சாதனைக்கு மேல் சாதனை



தொழில் துறையை பொறுத்தவரைக்கும், 39 ஆயிரத்து, 666 தொழிற்சாலைகளுடன், தமிழகம் தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. இங்கு, 27 லட்சத்து, 75,000 பேர் பணிபுரிகின்றனர். முதலீடுகளை பொறுத்தவரை, 5.35 லட்சம் கோடி ரூபாய் பெற்று, இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். தொழிற்சாலைகளில் அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது இடம். சூரியசக்தியில் நான்காவது இடத்தில் உள்ளோம்.

தமிழக காவல் துறையில் தான் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம். இப்படி சாதனைக்கு மேல் சாதனையைச் செய்து கொண்டிருக்கிறது தமிழகம்.

கூட்டு உழைப்பிற்கு பலன்



இந்தச் சாதனைகளை எல்லாம் சாதாரணமாக செய்து விடவில்லை. மேலே பாம்பு, கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள். இதற்கெல்லாம் இடையில் மாட்டிக்கொண்ட மனிதனைப் போல, ஒரு பக்கம் மத்திய அரசு; மறுபக்கம் கவர்னர்; இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்று தடைகளைக் கடந்து, நிகழ்த்தப்பட்ட சாதனைகள்.

இவையெல்லாம் ஸ்டாலின் என்ற தனி மனிதனுடைய சாதனைகள் அல்ல; என்னுடைய அமைச்சரவை, அதிகாரிகள், அவர்களுடைய கூட்டு உழைப்பிற்கு கிடைத்த பலன்.

முந்தைய, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியை விட, ஆயிரம் மடங்கு சிறப்பான சாதனைகளை, அனைத்துத் துறைகளிலும் செய்திருக்கிறோம்.

இந்த உறுதியோடும், மக்கள் மேல் உள்ள நம்பிக்கையோடும் சொல்கிறேன். அடமானம் வைக்க நினைப்பவர்களாலும், அபகரிக்க நினைப்பவர்களாலும், தமிழகத்தை ஒருபோதும் சூறையாட முடியாது. இதுவரை பார்த்தது, திராவிட மாடல் அரசின் பகுதி ஒன்று தான். வரும், 2026ம் ஆண்டு 2.0 வரும். அதில்இன்னும் சாதனைகளை படைப்போம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement