சட்ட கல்வியில் தலையிடாதீர்கள்; பார் கவுன்சிலுக்கு கோர்ட் கண்டிப்பு

2



புதுடில்லி: சட்ட கல்வியில் என்னென்ன படிப்புகள் இருக்க வேண்டும் என்பதை, கல்வியாளர்களே முடிவு செய்ய முடியும். இதில், பி.சி.ஐ., எனப்படும் இந்திய பார் கவுன்சில் தலையிட முடியாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நாடு முழுதும் சட்ட கல்லுாரிகளில், ஓராண்டு எல்.எல்.எம்., எனப்படும் சட்டப் படிப்பை ரத்து செய்து, இந்திய பார் கவுன்சில், 2021ல் உத்தரவிட்டது.

மேலும், வெளிநாட்டு எல்.எல்.எம்., படிப்புகளுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:



கல்வி திட்டங்கள் விவகாரங்களில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள். அதை பி.சி.ஐ., எப்படி முடிவு செய்ய முடியும். இது கல்வியாளர்கள் எடுக்க வேண்டிய முடிவு.

நம் நாட்டில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்களுடைய திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

படிப்புகள், பாட திட்டங்கள் குறித்து கல்வியாளர்களே முடிவு எடுக்க வேண்டும். நீங்களாகவே அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஏற்கனவே உள்ள நடைமுறை என்று கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், பல்கலை மானியக் குழுவுக்கும் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் உதவும்படி, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியையும் அமர்வு கேட்டுக் கொண்டது. அடுத்த விசாரணை, ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement