பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்

ஜியாமென்: சுதிர்மன் கோப்பை பாட்மின்டனில் இரண்டாவது தோல்வியடைந்த இந்திய அணி, காலிறுதி வாய்ப்பை இழந்தது.
சீனாவில், அணிகளுக்கு இடையிலான சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இந்திய அணி 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்தியா 1-4 என டென்மார்க்கிடம் தோற்றது. இரண்டாவது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்திய அணி, வலிமையான இந்தோனேஷியாவை சந்தித்தது.
முதலில் நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, 10-21, 21-18, 21-19 என இந்தோனேஷியாவின் டாப்ட், மேக்லண்ட் ஜோடியை சாய்த்தது. இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
சிந்து தோல்வி
அடுத்து நடந்த பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து 12-21, 13-21 என வர்தானியிடம் (இந்தோனேஷியா) எளிதாக தோல்வியடைந்தார். அடுத்த நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிரனாய், ஜோனாதன் கிறிஸ்டி மோதினர். முதல் செட்டை 21-19 என வென்று நம்பிக்கை தந்த பிரனாய், அடுத்த இரு செட்டை 14-21, 12-21 என நழுவவிட்டார். முடிவில் 21-19, 14-21, 12-21 என பிரனாய் வீழ்ந்தார். இந்தியா 1-2 என பின்தங்கியது.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் பிரியா, ஷ்ருதி ஜோடி 10-21, 9-21 என இந்தோனேஷியாவின் மாயாசரி, ரதாந்தி ஜோடியிடம் தோற்றது. முடிவில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து, காலிறுதி வாய்ப்பை இழந்தது.

Advertisement