வங்கதேச அணி முன்னிலை

சாட்டோகிராம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலை பெற்றது வங்கதேசம்.
வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வென்றது. இரண்டாவது டெஸ்ட், சாட்டோகிராமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 227/9 ரன் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. தய்ஜுல் வீசிய முதல் பந்தில் முஜரபானி (2) கிளம்ப, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம் சார்பில் தய்ஜுல் 6, நயீம் ஹசன் 2 விக்கெட் சாய்த்தனர்.
ஷாத்மன் சதம்
வங்கதேச அணிக்கு ஷாத்மன் இஸ்லாம், அனாமுல் (39) ஜோடி துவக்கம் தந்தது. மோமினுல் ஹக் (33), கேப்டன் நஜ்முல் ஷாண்டோ (23) நிலைக்கவில்லை. சதம் அடித்த ஷாத்மன் இஸ்லாம், 120 ரன்னில் அவுட்டானார்.
'சீனியர்' முஷ்பிகுர் ரஹிம் (40) ரன் அவுட்டானார். இரண்டாவது நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 291 ரன் எடுத்து, 64 ரன் முன்னிலை பெற்றிருந்தது. மெஹிதி ஹசன் (16), தய்ஜுல் (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வேயின் வின்சென்ட் மசேகெசா 3 விக்கெட் சாய்த்தார்.

Advertisement