பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் மீதான வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தன் பணிக்காலத்தில், திருவள்ளூர் டி.எஸ்.பி.,யாக இருந்த காதர் பாட்ஷா மற்றும் கோயம்பேடு சிறப்பு துணை ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தார்.
ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காகவே, தங்கள் மீது பொன் மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்ததாகவும், அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ., விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இதன்அடிப்படையில், சி.பி.ஐ., வழக்கும் பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, காதர் பாட்ஷா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மனு மீது ஏற்கனவே விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன் மாணிக்கவேல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்தட்டும். ஆனால், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும்' என்று, கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'விசாரணை நடத்தலாம்; ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்றால், பின் எதற்காக விசாரணை நடத்த வேண்டும். உங்கள் மீது தவறு இல்லை என்றால், எதற்காக குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோருகிறீர்கள்' என, கேள்வி எழுப்பினர். இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'பொன் மாணிக்கவேலுக்கு எதிராக சி.பி.ஐ., தொடர்ந்து விசாரணை நடத்தலாம். இந்த விவகாரம் தொடர்பாக, வேறு ஏதேனும் மனு விசாரணைக்கு வந்தால், அதை தகுதி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம்' என்றனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -