குடிநீர் தொட்டியில் குரங்குகள் குளித்து கும்மாளமிட்டு அட்டகாசம்

ஆவடி, ஆவடி, திருமலை ராஜபுரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, குரங்குகள் தொல்லையால், பகுதிவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இங்கிருந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர். அப்போது, இரண்டு குரங்குகள் மட்டும் தப்பியதாக க கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது திருமலைராஜபுரம், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் 100 க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக மதியம், இரவு நேரங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், வீடுகளில் புகுந்து பகுதிவாசிகளை அச்சுறுத்தி வருகிறது.
வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டியின் மூடிகளை திறந்து, தண்ணீரில் குதித்து கும்மாளமிடுகின்றன. மேலும், உணவு, பழங்கள் மற்றும் ஆடைகளை திருடி செல்கின்றன.
குரங்குகளின் தொல்லையால், கோடை காலத்தில் கூட காற்று உள்ளே வர, ஜன்னல், கதவுகளை திறந்து வைக்க முடியாமல் பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வாகன நிறுத்தத்திலும் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இருசக்கர வாகனங்களில் வைத்து செல்லும் பொருட்களையும் குரங்குகள் திருடி செல்கின்றன. காலை, மாலை நேரங்களில் இங்குள்ள ஜெயின் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குரங்குகளுக்கு சப்பாத்தி, பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட கொடுக்கின்றனர். இதனால், குரங்குகள் வேறு எங்கும் செல்லாமல், அப்பகுதியிலேயே அச்சமின்றி சுற்றித் திரிகின்றன.
'இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை வலுத்துள்ளது.