தெருவில் ரோடு, வாறுகால்கள் வசதி இல்லை

ஸ்ரீவில்லிபுத்துார்; வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னுார் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீராம் நகர் தெருக்களில் ரோடு, வாறுகால் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறுகிய ரோட்டால் விபத்து அபாயம் காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் கணேசன், சுதர்சன், முத்தையா, சுப்புராஜ், வேலுச்சாமி, தாமரைச்செல்வன் கூறியதாவது; வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகரில் ஆண்டுதோறும் குடியிருப்புகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இங்குள்ள ஒரு சில தெருக்களில் ரோடு வாறுகால்கள் வசதி செய்திருந்தாலும், மெயின்ரோட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகர் தெருவில் ரோடு, வாறுகால்கள் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளின் கழிவு தண்ணீர் மண் ரோட்டில் செல்கிறது. தார் ரோடு வசதி இல்லாமல் மண் பாதையாக இருப்பதால் சிறிய மழை பெய்தாலே சகதி ஏற்பட்டு மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். தெருவின் இருபுறமும் கழிவுநீர் வாறுகால் கட்டி தார் ரோடு அல்லது பேவர் பிளாக் ரோடு அமைத்து தர வேண்டும்.

தெருவில் நுழைவுப்பகுதியில் குப்பைத்தொட்டி இல்லாததால் கழிவுகள் ரோட்டில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக் கேடு, நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, குப்பை தொட்டி அமைத்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மெயின் ரோட்டில் உள்ள கழிவுநீர் வாறுகால் முழு அளவில் கட்டப்பட வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும். தற்போது பெரும்பாலான வீடுகளில் மினரல் வாட்டர் தான் விலை கொடுத்து வாங்குகிறோம்.

கிருஷ்ணன் கோவிலில் இருந்து குன்னூர் செல்லும் ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதால் விபத்து அபாயம் காணப்படுகிறது. தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் நடப்பதால் கனரக லோடு வாகனங்கள் குன்னூர் ரோட்டில் வழியாக செல்வதால் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வரும்போது எளிதில் செல்ல முடியவில்லை. எனவே, ரோடு விரிவாக்கம் செய்வது அவசியம்.

இப்பகுதியில் குடியிருப்புகள் உருவாகி பல ஆண்டுகளான நிலையில் இன்னும் அடிப்படை பணியை வசதிகள் செய்து தருவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும் என்றனர்.

Advertisement