நகரமன்ற கூட்டத்தில் ஒரே வரிசையில் மூவருக்கு 'சீட்'

திண்டிவனம்: திண்டிவனம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.

துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலில் இறந்த 26 சுற்றுலா பயணிகள், போப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நகராட்சி 15வது வார்டு பாரதிதாசன் பேட்டை புதிய லேவுட் போடுவதிற்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்பட்டது. தீர்த்தக்குளம் அருகே கழிவு நீர் வாய்க்காலை சுத்தம் செய்ய கூடுதல் ஆட்கள், பூதேரி பகுதியில் குடிநீர் பைப் லைன் அமைத்தல், பூதேரி மெயின் ரோடு பாதாள சாக்கடை பழுது சரிசெய்தல், மயிலம் சாலை பயணிகள் நிழற்குடை எதிரில் ஒரு ஹைமாஸ் அமைத்தல், 4வது வார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமுதாய கூடம் கட்டும் பணியை விரைவில் முடிப்பது உள்ளிட்ட கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

ஒரே வரிசையில் இருக்கை



திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவருக்கு, மேடை போன்ற அமைப்பில், தனி இருக்கையும், இதன் இரு பக்கத்தில் 1 அடி தாழ்வாக உள்ள இடத்தில் ஆணையர், துணை தலைவருக்கு இருக்கை இருக்கும். நேற்றைய கூட்டத்தில், நகர மன்ற தலைவர் இருக்கை அருகிலே ஆணையருக்கு இருக்கை அமைத்து ஆணையர் அமர்ந்திருந்தார். கூட்டம் துவங்கியதும், வி.சி.கட்சியை சேர்ந்த துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், 'நகராட்சி தலைவருக்கு பக்கத்தில் சீட் ஒதுக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்து வருவதாக' கூறினார். தி.மு.க., கவுன்சிலர் பாபு, கீழ் பகுதியில் இருந்த துணை தலைவர் இருக்கையை துாக்கி சென்று, நகராட்சி தலைவர் இருக்கை பக்கத்தில் வைத்து, துணை தலைவரை உட்கார வைத்து, நீண்ட நாள் இடப்பிரச்னைக்கு முற்றுப்பள்ளி வைத்தார்.

Advertisement