வர்த்தக வாகன வரி உயர்வு இன்று முதல் அமல்

பெங்களூரு: மாநிலத்தில் புதிதாக வாங்கும் வர்த்தக வாகனங்களின் மீதான வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கர்நாடக மோட்டார் வாகன வரிவிதிப்பு சட்டத்தின் படி, புதிதாக வாங்கும் டாக்சி, வேன் போன்ற வர்த்தக வாகனங்களுக்கு வரியை உயர்த்தி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இச்சட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு டாக்சி, மினி வேன்கள் போன்ற வர்த்தக வாகனங்களை இயக்குபவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில், இன்று முதல் வர்த்தக வாகனங்களின் மீதான வரி உயர்வு அமலுக்கு வருகிறது.

இதன்படி, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்களுக்கு 5 சதவீதம்; 10 முதல் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்களுக்கு 9 சதவீதம்; 15 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வாகனங்களுக்கு 15 சதவீதம் ஆயுள்கால வரி விதிக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக, 10 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் கார் வாங்கினால், வரியாக 50,000 ரூபாயை ஒரே தவணையில் செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதே சமயம், 25 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுமானத் துறையில் பயன்படும் வாகனங்களுக்கு வாழ்நாள் வரி அவற்றின் விலையில் 8 சதவீதம் ஆகும். இதன் மூலம் 2025 -- 26 நிதியாண்டில், 15,000 கோடி ரூபாய் வரி வசூலிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

Advertisement