கிராமங்களில் சைபர் வழக்குகள் அதிகரிப்பு

பெங்களூரு: கடந்த இரண்டு ஆண்டுகளில் கிராமங்களில் பதிவாகும் சைபர் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக உள்துறை சமர்ப்பித்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புறங்களில் சைபர் குற்றங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், கிராமப்புறங்களில் பதிவான சைபர் வழக்குகள் குறித்த புள்ளி விபரங்களை, கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் உள்துறை சார்பில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது

இந்த அறிக்கை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இதன்படி, 2022ல் 800; 2023ல் 1,417; 2024ல் 1,600; நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் வரை 191 சைபர் வழக்குகள் பதிவாகி உள்ளன. அதுமட்டுமின்றி 2024ல் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் கூட 12 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது கடந்த இரண்டு ஆண்டுகளில், கிராமங்களில் சைபர் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளதை தெளிவாக காட்டுகிறது. முந்தைய காலங்களில் நகரங்களில் வசிப்போரை மட்டும் குறிவைத்து நடக்கும் சைபர் மோசடிகள், தற்போது கிராமங்களில் வசிப்பவர்கள் மீதும் அதிக அளவில் நடக்கிறது.

கிராமங்களில் இணைய சேவை, டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து உள்ளதே வழக்குகள் அதிகமானதற்கு காரணம். நகரங்களில் வசிப்போரை விட கிராமங்களில் வசிப்போரிடம் சைபர் மோசடி குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை.

இதனாலே, அவர்களில் பலர் சைபர் மோசடியில் சிக்குவதாக சைபர் பிரிவு வல்லுநர்கள் கூறி உள்ளனர்.

Advertisement