'மாஜி' எம்.எல்.ஏ., மாஸ்டர் பிளான்; பண்ருட்டியில் ஆதரவாளர்கள் 'குஷி'
பண்ருட்டி சட்டசபையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,வாக அ.தி.மு.க.வை சேர்ந்த சத்யா இருந்தார். அதே காலக் கட்டத்தில் இவரது கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி சேர்மனாக இருந்தார்.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். இதற்காக தொகுதி முழுதும் தனது ஆதரவாளர்களையும், அதேபோல் பூத் வாரியாக தனக்கு எதிரான கட்சியினரையும் தேர்தல் பணியாற்ற தயார்படுத்தி வைத்திருந்தார்.
கட்சியில் சீட் கொடுத்தால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என, தீவிரமாக தேர்தல் பணியில் கவனம் செலுத்தினார். ஆனால், அவருக்கு கட்சித் தலைமை சீட் ஒதுக்காததால் ஏமாற்றமடைந்தார். அவருக்கு பதிலாக சொரத்தார் ராஜேந்திரன் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியது.
சீட் ஒதுக்காததால் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் சத்யா, அவரது கணவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டது. சிறிது காலம் அமைதியாக இருந்த சத்யா தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் பழனிசாமியை சந்தித்து வந்தார். இதன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சத்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர். மேலும் கட்சியின் மாநில மகளிரணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முன்பை விட தீவிரமாக கட்சி பணியை துவக்கியுள்ளார். மீண்டும் தனது ஆதரவாளர்கள் மட்டுமின்றி எதிர்கட்சிகளில் உள்ளவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். எப்படியாவது வரும் சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட கட்சியில் சீட் பெற தீவிர முயற்சி செய்து வருகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் தேர்தல் களப்பணியை துவக்கியுள்ளனர்.