விவசாயிகளிடம் காய்கறி வாங்கி விற்கும் திட்டம்: செயல்பாட்டிற்கு வருவதில் இழுபறி

சென்னை: விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, காய்கறி, பழங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் மக்களுக்கு விற்கும் திட்டம் குறித்த ஆய்வு முடிந்தும், அதை செயல்படுத்தாமல், கூட்டுறவுத் துறை தாமதம் செய்து வருகிறது.

தமிழகத்தில், விவசாயிகளிடம் இருந்து, குறைந்த விலைக்கு காய்கறி, பழங்களை வாங்கும் இடைத்தரகர்கள், வியாபாரிகளிடம் நல்ல விலைக்கு விற்கின்றனர்.

இதனால், விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைப்பதில்லை. மக்களும் காய்கறி, பழங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மாநிலம் முழுதும், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடை போன்றவை, மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளன.

கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், காய்கறி, பழங்கள் அதிகம் விளைகின்றன.

அம்மாவட்டங்களில் பயிர்க்கடன் வாங்கி, விவசாயம் செய்யும் விவசாயிகளிடம், காய்கறி, பழங்களை கொள்முதல் செய்து, மக்களிடம் நேரடியாக விற்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்தது. இதற்காக, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து காய்கறிகளை, திருச்சி, பெரம்பலுார், விழுப்புரம் வழியாக சென்னைக்கு ஒருவழித் தடத்திலும்; திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலுாருக்கு மற்றொரு வழித்தடத்திலும், மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு ஒரு வழித்தடத்திலும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

நீலகிரி, கிருஷ்ணகிரியில் இருந்து தமிழகம் முழுதும், பழங்கள், காய்கறி அனுப்பவும், இந்த வழித்தடங்களில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், அங்காடிகள் திறந்து, காய்கறி, பழங்கள் விற்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக, காய், கனி வழித்தட வரைபடம், திட்ட செலவை உள்ளடக்கிய ஆய்வுப் பணிகளை அதிகாரிகள், கடந்த ஆண்டிலேயே முடித்து விட்டனர். ஆனாலும், திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுப் பணியாளர்கள் கூறியதாவது:

கூட்டுறவு சங்கங்கள், 50 பசுமை காய்கறி கடைகளை நடத்துகின்றன. அங்கு, மொத்த விலை அங்காடிகளில் இருந்து, காய்கறி வாங்கி, விற்கப்படுகிறது.

காய்கறி, பழங்களுக்கு தேவை உள்ளது. அவற்றை விற்கும் சந்தையில் பன்னாட்டு மற்றும் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

பயிர் சாகுபடி செய்யும் இடத்தில் இருந்து, மக்களை சென்றடையும் வரையிலான கட்டமைப்பு வசதி, கூட்டுறவு வசம் உள்ளது.

எனவே, விவசாயிகளிடம் இருந்து வாங்கி, மக்களிடம் நேரடியாக விற்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement