விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் துணைவேந்தரை கைது செய்யலாம்; ஐகோர்ட் அதிரடி உத்தரவு

1

சென்னை: 'சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர், தன் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை கைது செய்து விசாரிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக இருப்பவர் ஆர்.ஜெகநாதன்.

இவர், அரசு அனுமதியின்றி, விதிகளை மீறி, சொந்தமாக பெரியார் பல்கலை தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை துவக்கி, அரசு நிதியை பயன்படுத்தியதாகவும், பல்கலை அதிகாரிகளை வைத்து அமைப்பை இயங்க செய்ததாகவும், பல்கலை ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

துணை வேந்தருக்கு எதிராக, பல்கலை ஊழியர்கள் சங்கத்தினர், கேள்வி எழுப்பிய போது, ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில், சேலம் கருப்பூர் போலீசில், ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது, மோசடி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர்.

சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்து, நிபந்தனை ஜாமின் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ஜாமினை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் கூடுதல் கமிஷனர் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், மனு மீதான உத்தரவை தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த மனு மீதான உத்தரவை, நீதிபதி பி.வேல்முருகன் நேற்று பிறப்பித்தார்.

அதன் விபரம்:

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் இல்லை. ஏனெனில், துணைவேந்தர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள், அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரிக்கப்பட முடியும்.

பாதிக்கப்பட்டவரின் வாதத்தை கேட்காமல், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில், ஜாமின் வழங்குவதற்கு தடை உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்கவும், அதை மறுக்கவும், மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளதால், நீதிமன்ற காவலில் வைக்க மறுத்ததில் தவறு இல்லை.குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறினாலோ அல்லது அரசு தரப்பு சாட்சியங்களை சிதைக்க முயற்சிப்பதாக கண்டறிந்தாலோ, பல்கலை துணைவேந்தரை கைது செய்து, அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து, சட்டத்தின்படி விசாரணையை நடத்த, விசாரணை அதிகாரிக்கு உரிமை உள்ளது.

இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement