பயங்கரவாதிகளின் மொபைலை வேவு பார்த்தால் என்ன தப்பு? 'பெகாசஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: 'மொபைல் போன்களை வேவு பார்க்கும் வகையில் உளவு மென்பொருள்களை, பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தினால் என்ன தவறு?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., என்ற நிறுவனம் தயாரிக்கும், 'பெகாசஸ்' என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக, 2021ல், அறிக்கை வெளியானது.
ஆதாரம் இல்லை
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த, 17 பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட புலனாய்வுகளில் இது தெரியவந்தது.
குறிப்பாக பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி, உலகெங்கும், 50,000க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக அதில் கூறப்பட்டது. இதில், பல நாட்டின் முக்கிய தலைவர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்குவர் என்று கூறப்பட்டது.
இந்தியாவில், 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக அதில் கூறப்பட்டது.
இது, அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து மத்திய அரசு தெரிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பாக, மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்தது. மேலும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையில், மேற்பார்வையிடும் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, 27 பேரின் மொபைல் போன்கள் ஆராயப்பட்டன. ஆனால், அவற்றில் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என, நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஐந்து பேரின் மொபைல் போன்களில், வேவு பார்க்கும் சில வைரஸ்கள் இருந்ததாக கூறப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:
தற்போது நாம் எந்த காலகட்டத்தில் உள்ளோம் என்பதை பார்க்க வேண்டும். நமக்கும் பொறுப்புகள் உள்ளன.
பயங்கரவாதிகளை கண்காணிக்க, இதுபோன்ற உளவு மென்பொருள் களை பயன்படுத்தினால் அதில் என்ன தவறு இருக்கிறது?
நம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக அமையக் கூடிய எந்த ஒரு அறிக்கையையும் வெளியிட அனுமதிக்க முடியாது. அதன்படி, இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட முடியாது.
விசாரணை
அதே நேரத்தில், தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் தனிப்பட்ட நபர்கள் உளவு பார்க்கப்பட்டனரா என்பது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, எந்த அளவுக்கு, நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடலாம் என்பது குறித்து ஆராயப்படும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை, ஜூன் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
57 முறை டிரான்ஸ்பர் ஆன ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா இன்று பணி ஓய்வு
-
பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!