எதிர்க்கட்சி தலைவர் சிவா பிறந்த நாள் விழா

புதுச்சேரி; எதிர்க்கட்சி தலைவர் சிவா தனது 58 வது பிறந்தநாள் விழாவை கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ., நேற்று தனது 58 வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி, தனது தாய் தனலட்சுமியிடம் ஆசி பெற்றார்.

பின், தொகுதி தி.மு.க., சார்பில் உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.

தொடர்ந்து வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில், தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பின் தி.மு.க., நிர்வாகிகளுடன் வில்லியனுாரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.

கோட்டைமேடு பகுதியில் உள்ள லட்சுமி திருமண நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.

அங்கிருந்து குடும்பத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு முன்னாள் சேர்மன் ஸ்ரீதர் வரவேற்பு அளித்தார். மாலை 6:00 மணிக்கு புதுச்சேரி மாநில தி.மு.க., நிர்வாகிகள் சார்பில், பழைய துறைமுகம் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த, பிறந்த நாள் விழாவில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் முன்னிலையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா கேக் வெட்டி கொண்டாடினார்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், தி.மு.க., எம்.எல்.ஏக்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், இ. கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம், வி.சி., கட்சி மாநில செயலாளர் தேவ பொழிலன், பாவாணன் உட்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement