'பைக் டாக்சி'கள் இயங்க ஜூன் 15 வரை அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் ஜூன் 15ம் தேதி வரை, 'பைக் டாக்சி'களை இயக்க, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

'மாநில அரசு, பைக் டாக்சிகளுக்கு எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை. விதிகள் இல்லாமல் பைக் டாக்சிகள் இயக்க அனுமதிக்க முடியாது. இதனால் அடுத்த ஆறு வாரங்களுக்கு ஓலா, ஊபர், பைக் டாக்சி சேவையை நிறுத்த வேண்டும்.

இதை அரசு உறுதி செய்ய வேண்டும். தேவையான விதிகளை வகுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கடந்த 2ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி தீர்ப்பு கூறினார்.

இந்த தீர்ப்பு வெளியாகி நான்கு வாரங்களுக்கு பின், கடந்த 25ம் தேதி தான் பைக் டாக்சி சேவையை நிறுத்த, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி உத்தரவிட்டார்.

இதையடுத்து, பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஊபர் இந்தியா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் இடைக்கால மனுத் தாக்கல் செய்தன. நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி நேற்று விசாரித்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் சீனிவாஸ் ராகவன், நிஷாந்த் வாதிடுகையில், 'பைக் டாக்சிக்கு அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதன் மூலம், நிலையான நகரமயமாக்கல் அமைப்புக்கு பைக் டாக்சி சேவை அவசியமாக உள்ளது' என்றனர்.

அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், பைக் டாக்சி விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றுவதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பைக் டாக்சிகளை ஜூன் 15ம் தேதி வரை இயக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement