வர்த்தக துளிகள்

மருந்து காப்புரிமை கேட்பதா?'

சிறிய அளவிலான கண்டுபிடிப்புகள் வாயிலாக, மருந்து காப்புரிமைகளைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடும் சில நிறுவனங்களை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் விமர்சித்தார்.மேலும் அவர் கூறியதாவது: ஒரு சில நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்களின் இயற்கைக்கு அப்பாற்பட்ட லாபத்துக்காக, ஏற்கனவே உள்ள சில மருந்துகளில் சிறிய மாற்றங்களுக்காக மருந்து காப்புரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்கின்றன. இதுபோன்ற நடைமுறைகளால் லட்சக்கணக்கான மக்களுக்கு மலிவு விலையில் மருந்து கிடைப்பது தடுக்கப்படுகிறது. பொது சுகாதாரத் தேவைகளை விட, லாபத்திற்கு முன்னுரிமை அளிப்பது கவலையளிக்கிறது.இவ்வாறு கூறினார்.



அமெரிக்க ஏற்றுமதிக்கு

இந்தியாவை நாடும் சீனாஅமெரிக்க வரி விதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீன நிறுவனங்கள், தங்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்க, இந்திய ஏற்றுமதியாளர்களை அணுகியுள்ளதாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் வரி விதிக்கப்பட்ட போது, சீன ஏற்றுமதியாளர்கள் வியட்நாமில் தங்கள் தொழில் நிறுவனங்களை அமைத்தும், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பொருட்களை அனுப்பியும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தனர். டிரம்ப் தற்போது, வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் 46 சதவீத பரஸ்பர வரி விதித்துள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் வாயிலாக, தங்கள் ஆர்டர்களை அனுப்ப சீனர்கள் அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement