கோவை கோட்ட ஆர்.எம்.எஸ்.,சுக்கு கோ - ஆப்டெக்ஸ் வினியோக 'ஆர்டர்'

கோவை; தமிழகத்தில், மண்டல அளவில் உள்ள, 'கோ-ஆப்டெக்ஸ்' விற்பனை நிலையங்களுக்கு, தயாரிப்பு பொருட்களை கொண்டு செல்வதற்கான ஆர்டரை, கோவை கோட்ட ஆர்.எம்.எஸ்., பெற்றுள்ளது.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான கோ - ஆப்டெக்ஸ், கைத்தறி நெசவாளர்களிடமிருந்து பட்டு, பருத்தி சேலைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், பெட்ஷீட், குர்தீஸ், நைட்டிகள் உட்பட பல்வேறு தயாரிப்புகளை வாங்கி, விற்பனை நிலையங்கள் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கிறது.

தமிழகத்தில், மண்டல அளவில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு, இத்தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கான பணி ஆணை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒப்பந்தப்புள்ளி வாயிலாக இடப்படும்.

இந்தாண்டு, லாஜிஸ்டிக் போஸ்ட் வசதி வாயிலாக அனுப்பி வைக்க, கோவை ஆர்.எம்.எஸ்., கோட்டம் வாயிலாக, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை, கோ - ஆப்டெக்ஸ், கோவை மண்டல முதுநிலை மேலாளர் அம்சவேணியிடமிருந்து, ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு பெற்றுக்கொண்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு, கோவை, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில், கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் உற்பத்தி செய்யும் பொருட்கள், கோவை, சென்னிமலை ரக சேமிப்பு கிடங்குகளில் இருந்து, மண்டல அளவில், கோவை உட்பட, சென்னை, கடலுார், சேலம், மதுரை, தஞ்சாவூர், நெல்லை, வேலுார் ஆகிய பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு, கொண்டு செல்லப்பட உள்ளது.

Advertisement