சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு

சென்னை; ''துறைமுகத்தில் இருந்து அதிக துாரம் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் மதுரையில், ஏற்றுமதி சரக்குகளை விரைந்து அனுப்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்,'' என, 'டிட்கோ' நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சந்தீப் நந்துாரி தெரிவித்தார்.

தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனமும், எம்.சி.சி.ஐ., எனப்படும் மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழில் சபையும் இணைந்து, 'மாநில சரக்கு போக்குவரத்து கொள்கை' என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை சென்னையில் நேற்று நடத்தின.

சமர்ப்பிப்பு



இதில், எம்.சி.சி.ஐ., தலைவர் ராம்குமார் சங்கர் பேசும்போது, ''நாட்டில் தற்போது, 300 பில்லியன் டாலராக உள்ள சரக்கு போக்குவரத்து துறையின் மதிப்பு, 2030ல், 670 பில்லியன் டாலராக அதிகரிக்கும்.

''சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் கையாளுவது உள்ளிட்டவை தொடர்பாக நிலவும் பிரச்னை, அதற்கான தீர்வு குறித்து ஆய்வு செய்கிறோம். இதன் அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்'' என்றார்.

தமிழக தொழில் துறை செயலர் அருண்ராய் பேசியதாவது:

இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இதற்கு, சரக்கு போக்குவரத்துக்கு உதவும் துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க பணியாளர்கள், எளிதில் தொழில் செய்யும் சூழல் ஆகியவையே காரணம்.

சரக்கு போக்குவரத்துக்கு தேவை அதிகரித்து வருவதால், பரந்துாரில் புதிய விமான நிலையம், கோவை, துாத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்துாரி பேசியதாவது:

தமிழகத்தில் சரக்குபோக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் செலவைக் குறைத்து, விரைவாக சரக்குகளை அனுப்புவதற்காக, தமிழக அரசு, சரக்கு போக்குவரத்து கொள்கையை, 2023ல் வெளியிட்டது. சரக்கு போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

முதலீடு



இதன் வாயிலாக, 63,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 1.40 - 1.60 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

டில்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்கள், துறைமுகங்களில் இருந்து அதிக துாரம் உள்ளன. எனவே, அம்மாநிலங்களில் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் அனைத்தும் ஓர் இடத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவை, அங்கிருந்து, தனி சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்டு, துறைமுகங்களுக்கு விரைந்து அனுப்பப்படுகின்றன.

இத்திட்டத்தை, மதுரை, ஓசூர் ஆகிய, துறைமுகத்தில் இருந்து அதிக துாரம் உள்ள நகரங்களில், செயல்படுத்துவது குறித்து ஆய்வுகள் செய்யப்படும். கடலுார் உள்ளிட்ட சிறு துறைமுகங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement