இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

15

புதுடில்லி: இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. அடுத்து நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


அமைச்சரவை கூட்டம்
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அடுத்து நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஜாதி வாரிகணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து உள்ளது. மாநில அளவில் தனியாக கணக்கெடுப்பு நடத்த தேவையில்லை.

அரசியல் ஆதாயம்



ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் எப்போதும் எதிராக இருந்தது. 2010 ல் பிரதமர் ஆக மன்மோகன் சிங், ஜாதிவரை கணக்கெடுப்பு குறித்து மத்திய அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவளித்தன. காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஜாதி வாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தியது அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். சில மாநிலங்கள் ஜாதி வாரிகணக்கெடுப்பை நடத்தி உள்ளன. சில மாநிலங்களில் சிறப்பாக செய்து இருந்தாலும் வேறு சில மாநிலங்கள் அரசியல் கண்ணோட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாமல் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு சமூகத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது . அரசியலால் நமது சமூக கட்டமைப்புக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


பீஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டன. தெலுங்கானா மாநிலத்திலும் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தேசிய அளவில் ஜாதி வாரி மக்கள் தொகைகணக்கெடுப்பு நடத்தவேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறி வந்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களும் இந்த கோரிக்கையை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement