ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சமூக பொருளாதாரம் வலுப்பெறும்: அண்ணாமலை

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் நாட்டின் சமூக பொருளாதாரம் வலுப்பெறும். நாட்டின் வளர்ச்சி பயணமும் தொடரும் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி கணக்கெடுப்பைச் சேர்க்க முடிவு செய்ததன் மூலம் சமூக சமத்துவம் மற்றும் ஒவ்வொரு பிரிவினரின் உரிமைகளுக்கும் உறுதியளிக்கும் ஒரு வலுவான செய்தி கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2011 ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சமூக பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு என்ற குழுவை அமைத்து மக்களின் ரூ.4,393.6 கோடியை செலவு செய்தது. 2013 டிச.,ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி முடிவடைந்துவிட்டதாக கூறியது. ஆனால் ஒரு மாதம் கழித்து 2014 ஜன., மாதத்தில் ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை எனக்கூறி தரவுகளை வெளியிட மறுத்தது. ஆனால், உண்மையில், இந்தியாவில் 46 லட்சம் ஜாதிகள் உள்ளன. ஆனால், அரசு 4,147 ஜாதிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்து உள்ளது. இது மோசமான செயல்பாடு மட்டும் அல்ல. மாறாக அரசியல் நோக்கத்துடன் தரவுகளை கையாண்டு உள்ளது. ரூ.4,893 கோடி செலவு செய்துவிட்டு, 3 ஆண்டுகள் பணி நடந்த நிலையில் ஒரு புள்ளிவிபரம் கூட வெளியாகவில்லை.
தமிழகத்திலும் இதே கதைதான். 2020ல் அதிமுக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குலசேகரன் ஆணையத்தை அமைத்தது. 2021 ஜூன் மாதத்திற்குள் பணியை முடிக்க வேண்டிய நிலையில், அந்த ஆணையம் ஆறு மாத கூடுதல் அவகாசம் கோரியது. ஆனால், அப்போது பதவிக்கு வந்த தி.மு.க., அரசு அனுமதி மறுத்துவிட்டது.
இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பிரிவினைக்கு மட்டுமே ஜாதியை பயன்படுத்தி உள்ளன. அதிகாரம் அளிக்க அல்ல. பிரதமர் மோடியின் இன்றைய முடிவு, நாட்டின் சமூக பொருளாதார அடித்தளங்களை வலுப்படுத்தும். அதேவேளையில் நாட்டின் வளர்ச்சி பயணம் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.



மேலும்
-
பத்மஸ்ரீ விருது பெற்ற 'தினமலர்' ஆர்.லட்சுமிபதிக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து
-
சீமான் தலை இருக்காது: வலைதளத்தில் மிரட்டல்
-
பெங்களூரில் பீர் விலை 'விர்ர்ர்ர்ர்!'
-
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றம்
-
மின்சார வாகனங்களுக்கு மஹாராஷ்டிராவில் சலுகைகள்! வரி ரத்து, சுங்க வரியில் விலக்கு, மானியம் அறிவிப்பு
-
10 நிமிடத்தில் சிம் கார்டு டெலிவரி சேவை நிறுத்தம்