ஜாதிவாரி கணக்கெடுப்பு; தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி: சொல்கிறார் முதல்வர்

37


சென்னை: '' ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தி.மு.க.,வுக்கும், 'இண்டியா' கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.


முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தாமதம் செய்யவும், மறுக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் தோல்வியடைந்த மத்திய அரசு, கடைசியாக இப்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்து உள்ளது. ஆனால், எப்போது இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும், எப்போது கணக்கெடுப்பு நிறைவடையும் என்ற முக்கியமான கேள்விகளுக்கு பதில் இல்லை.


பீஹார் தேர்தலில் சமூக நீதி பிரச்னை முன்னெடுக்கப்படும் சூழ்நிலையில் அரசியல் காரணத்திற்காக இதை அறிவித்து உள்ளனர். முன்பு, ஜாதி அடிப்படையில் மக்களை பிரிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டி, இழிவுபடுத்திய இதே பிரதமர், இப்போது அதே கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உள்ளார்.


ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது கொள்கை முடிவு எடுக்கவும், மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளவும், சமூக நீதி அளிக்கவும் மிகவும் அவசியமானது. பாதிப்பு எந்தளவு என்பதை அறியாமல், அநீதிகளுக்கு நிவாரணம் அளிக்க முடியாது.
தமிழக அரசுக்கும், தி.மு.க.வுக்கும் இது ஒரு மிகச்சிறப்பான வெற்றியாகும். சட்டசபையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி முதன்முதலாக நிறைவேற்றியது நாம் தான். ஒவ்வொரு மன்றத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம்.


ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும்போதும், கடிதம் எழுதும் போதும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மற்ற அனைவரும் மாநில அளவிலான ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்திய நிலையில், கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நாம் உறுதியாக இருந்தோம்.

சட்டப்பூர்வமான ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும். இப்போது, நமது நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இது திமுக மற்றும் இண்டியா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு வெற்றியாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement