இந்தியாவின் அதிரடி நடவடிக்கை: வறண்ட பாக்., செனாப் நதியின் செயற்கைக்கோள் படம் வெளியீடு

53


புதுடில்லி: சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.

நம் அண்டை நாடான திபெத் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் ஆறு நதிகள், சிந்து நதி தொகுப்பாக கருதப்படுகிறது. இவற்றில், கிழக்கே பாயும் மூன்று நதிகள் இந்தியாவுக்கும், மேற்கு நோக்கி பாயும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகள் பாகிஸ்தானுக்கும் ஒப்பந்தப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நதிகளில் பாயும் தண்ணீரில் குறைந்த அளவு மட்டுமே இந்தியா பயன்படுத்த முடியும். பெரிய அளவில் அணைகளைக் கட்டி தடுத்து நிறுத்த கூடாது என்பது சிந்து நதிநீர் ஒப்பந்தம். இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவில் முறிவு ஏற்பட்டது.


இந்தியாவில் இடைவிடாமல் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.


தற்போது, இந்தியாவின் அதிரடி நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக பாய்ந்த தண்ணீர், தாக்குதலுக்குப் பின் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையால் வறண்ட நதியின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன.


"இந்தியாவிடம் சீண்டி பார்த்த பாகிஸ்தானுக்கு இதுவே தக்க பதிலடி" என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement