3 மாதங்களில் பாம்பு கடித்து60 பேருக்கு ஜி.எச்.,ல் சிகிச்சை



ஈரோடு::ஈரோடு மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில் பாம்பு கடித்து, 60 பேருக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், அவ்வப்போது பாம்பு கடித்ததாக சிகிச்சைக்கு வருகின்றனர். பாம்பு கடித்த நிலையில் சிகிச்சைக்கு வருவோர், தங்களை கடித்தது என்ன பாம்பு என்பதை அறிந்து வர வேண்டும். அவ்வாறு அறிந்திருந்தால், உடனடியாக அதற்கான சிகிச்சையை அளிக்கலாம். கடித்த பாம்பை பார்க்காதவர்கள், என்ன பாம்பு என தெரியாதவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து, அதன் முடிவை அறிந்த பின்னரே, அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்படும். அதற்கு முன் ஆரம்ப நிலை சிகிச்சை மட்டுமே வழங்க இயலும்.
ஈரோடு மாவட்டத்தில் கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு, நாகப்பாம்பு என, நான்கு வகை விஷ பாம்புகள் கடித்து நோயாளிகள் அதிகமாக வருகின்றனர். பாம்பு கடித்ததும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்து விட வேண்டும். தாமதம் செய்தால், நரம்பு மண்டலத்தை பாதித்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும். உடல் உறுப்புகளை அதிகமாக விஷத்தன்மை பாதித்துவிட்டால், விஷ முறிவு மருந்து செலுத்தியும் பலனில்லை.
ஈரோடு அரசு மருத்துவமனையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை, 60 பேருக்கு பாம்பு கடிக்கான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தவிர, பாம்பு அல்லது வேறு விஷ உயிரினம் கடித்ததாக, 32 பேர் அனுமதிக்கப்பட்டு, விஷ முறிவு சிகிச்சை வழங்கப்பட்டது. இவர்களில், ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். மற்றவர்கள் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 24 பேர் பாம்பு கடித்து சிகிச்சை பெற வந்துள்ளனர்.
இவ்வாறு கூறினர்.

Advertisement