நம்புதாளை ஜமாத்தில் ரூ.90 லட்சம் கடன் வாங்கிய ஈரோடு காங்., நிர்வாகி கடத்தலா

ஈரோடு:ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை கிழக்கு தெரு ஜமாத்தில், 2019 முதல் தற்போது வரை பல்வேறு காரணங்களை கூறி, 90 லட்ச ரூபாய் கடன் வாங்கியவர், ஈரோடில் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு காங்., சிறுபான்மை பிரிவு தலைவர் ஜூபைர் அகமது 31; கார் வாங்கி விற்கும் தொழிலில் செய்பவர். இவரது வீடு லக்காபுரத்தில் உள்ளது. இவர் நேற்று மதியம், 12.30 மணிக்கு, ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள, காங்., அலுவலகமான ஜவகர் இல்லத்தில் இருந்தபோது, இரு கார்களில் வந்த ஏழு பேர், அவரை காரில் ஏற்றி கொண்டு சென்றனர்.

இதுபற்றி ஜூபைர் அகமது மனைவி சனா, 25, என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சனா, அவரது மாமியார் உள்ளிட்டோர் நேற்று மதியம், 1:30 மணிக்கு ஈரோடு எஸ்.பி., அலுவலகம் வந்து, ''என் கணவரை கடத்தி சென்று விட்டனர். அவரை மீட்டு கடத்தி சென்றவர்களை கைது செய்யுங்கள்,'' என கண்ணீர் விட்டு கதறினார்.

''கணவரை மீட்க நடவடிக்கை இல்லை எனில், தற்கொலை செய்வேன்,'' என்று கூறிய சனா, சாலையை நோக்கி செல்ல முற்பட்டார். அப்போது இரு போலீசார், அலுவலக நுழைவாயில் கதவை மூடினர். 10க்கும் மேற்பட்ட போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். பின், எஸ்.பி., சுஜாதா விசாரித்தார்.

இதற்கிடையில், கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஜூபைர் அகமது இருப்பது தெரியவந்தது. சனா மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்றனர். கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்து, கடத்தப்பட்டதாக கூறிய இடம் வீரப்பன்சத்திரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது. எனவே, அங்கு விசாரணை நடத்துவர் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வீரப்பனசத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

போலீசார் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை கிழக்கு தெரு ஜமாத்தில், 2019 முதல் தற்போது வரை பல்வேறு காரணங்களை கூறி ஜூபைர் அகமது, 90 லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார். பணத்தை திருப்பி கேட்கும் போதெல்லாம், பல்வேறு காரணங்களை கூறி உள்ளார்.

பல நாட்களாக, பல இடங்களில் தேடியும் ஜூபைர் அகமது இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் தனியார் 'டிவி'யில் பேட்டி கொடுத்துள்ளார். இதை பார்த்த ஜமாத் நிர்வாகத்தினர், ஜூபைர் அகமது ஈரோட்டில் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

தங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலம், ஜூபைர் அகமது காங்., கட்சி அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்தனர். அங்கு சென்று அவரை தனியே அழைத்து வந்து, பேசுவது போல காரில் ஏற்றி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

அப்போது, கிழக்கு தெரு ஜமாத்தை சேர்ந்த சேக் தாவூத் என்பவர், ஜூபைர் அகமது, 90 லட்ச ரூபாய் தர வேண்டும் என புகார் அளித்துள்ளார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இவ்வாறு கூறினர்.

Advertisement