பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; 3டி வரைபடம் மூலம் என்.ஐ.ஏ., விசாரணை!

2

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தின் 3டி வரைபடத்தை உருவாக்கும் பணியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது பயங்கரவாதிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. தாக்குதல் நடந்த இடத்தில் ஆதாரங்களை தேடும் பணியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


வழக்கு குறித்து முக்கிய ஆவணங்கள், எப்.ஐ.ஆர்., நகல் ஆகியவற்றை என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்டறிய 3டி வரைபடம் மூலம் துப்பறியும் பணியை என்.ஐ.ஏ., அதிகாரிகள் துவங்கி உள்ளனர்.



உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பயங்கரவாத தாக்குதல் நடந்த பைசரன் மலைப்பகுதியின் 3 டி வரைபடத்தை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலமாக பயங்கரவாதிகள் எந்த வழியாக நுழைந்தனர்? எந்த பக்கமாக வெளியேறினர்? உள்ளிட்ட தகவல்களை கண்டறிய முடியும்.


பயங்கரவாதிகள் தலைமறைவாக இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு கோல்கட்டா ஆர்.ஜி.கர்., மருத்துவமனை பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயின் நடமாட்டத்தை கண்காணிக்க குற்றம் நடந்த இடத்தின் 3டி வரைபடத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement