சர்ச்சைக்குரிய 'கயாப்' பதிவு: நீக்கியது காங்கிரஸ்

36

புதுடில்லி: பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல், காங்., வெளியிட்ட சர்ச்சைக்குரிய 'கயாப்' பதிவை நீக்கியது


காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானுக்கு எதிரான போர் பதட்டம் ஆகியவை எழுந்துள்ள சூழலில், பிரதமர் மோடியை குறி வைத்து காங்., பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.


காங்கிரஸ் கட்சி, அதன் அதிகாரப்பூர்வ, 'எக்ஸ்' தளத்தில், பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல், சர்ச்சைக்குரிய படம் ஒன்றை வெளியிட்டது.


அவரது பழைய புகைப்படத்தில், உடல் இல்லாமல் அவரது ஆடைகள் மட்டும் இருந்தன. படத்தின் மேலே, காணவில்லை என்ற அர்த்தத்தில் ஹிந்தி வார்த்தை 'கயாப்' இடம்பெற்றிருந்தது. ஹிந்தியில், 'ஜிம்மெதாரி கே சமய் -- கயாப்' என, கமென்ட் எழுதப்பட்டிருந்தது.


'பொறுப்பை ஏற்கும் நேரத்தில் காணவில்லை' என கிண்டலாக தெரிவிக்கப்பட்டிருந்து. அனைத்து கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்கனவே குறை கூறியிருந்தார். அதை சுட்டுக்காட்டும் விதத்தில், காங்., கட்சியின் எக்ஸ் தள பதிவு இருந்தது.


இதற்கு, பா.ஜ., மட்டுமன்றி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர், அந்தப் பதிவை காங்கிரஸ் நீக்கியது.

Advertisement