தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றம்

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைக்கப்பட்டது.
ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ல் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால், இந்தியா -- பாக்., இடையே போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஏப்., 23ல், பிரதமர் மோடி தலைமையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
அதில், பாக்., உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதோடு, நம் நாட்டில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம்,டில்லியில் நேற்று மீண்டும் கூடியது.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் அனில் சவுகான் மற்றும் முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அடுத்தடுத்து கூட்டம்
இதைத் தொடர்ந்து, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் என அடுத்தடுத்து பிரதமர் மோடி தலைமையில் கூட்டங்கள் நடந்தன.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டது. இந்தக் குழு, கடந்த 1998ல் உருவாக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து நீண்டகால ஆய்வு மற்றும் பரிந்துரைகளை தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அளிப்பதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது.
இதில், வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூகத்தில் பிரபலமானவர்கள் உறுப்பினர்களாக நியமிப்பது வழக்கம்.
கடந்த, 2018ல் கடைசியாக இந்த குழு மாற்றியமைக்கப்பட்டு, ரஷ்யாவுக்கான முன்னாள் இந்திய துாதர் பி.எஸ்.ராகவன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, முற்றிலுமாக ராணுவம் மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழுவின் தலைவராகநம் நாட்டுக்காக, வெளிநாடுகளில் உளவு வேலை பார்க்கும் நம் உளவு அமைப்பான, 'ரா' எனப்படும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் முன்னாள் தலைவரும் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
போர் பதற்றம்
குழுவின் உறுப்பினர்களாக, தென் பிராந்திய ராணுவ முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங், மேற்கு மண்டல முன்னாள் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எம்.சின்ஹா, கடற்படை உயர் அதிகாரியும், நீர்மூழ்கி போர்க்கப்பலில் சிறந்தவருமான மோன்டி கன்னா, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ராஜிவ் ரஞ்சன், மன்மோகன் சிங், வெளியுறவுத் துறையில் பணியாற்றிய முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி வெங்கடேஷ் வர்மா ஆகிய ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களால் பாக்., உடனான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. வேறு வழிகளில் பாக்.,கை முடக்கும் திட்டத்திலும் இந்தியா இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு - -காஷ்மீரில், எல்லை கட்டுப்பாடு கோட்டில், ஆறு நாட்களாக பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. புதிதாக, ஜம்முவின் பார்க்வால் பகுதியில், சர்வதேச எல்லையில் இருந்து நம் ராணுவம் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதற்கு, நம் எல்லை பாதுகாப்புப் படையினர் சரியான பதிலடி கொடுத்தனர்.
இதையடுத்து, நேற்று 'ஹாட் லைன்' வாயிலாக, பாக்., ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை, நம் ராணுவ இயக்குநர் ஜெனரல் தொடர்புகொண்டு, சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோட்டில் பாக்., தொடர்ந்து அத்துமீறுவதை சுட்டிக்காட்டி கடுமையாக எச்சரித்தார்.
மேலும்
-
ஏ.டி.எம்., கட்டண உயர்வு இன்று முதல் அமல்; பரிவர்த்தனைகளை நோட் பண்ணுங்க!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; 3டி வரைபடம் மூலம் என்.ஐ.ஏ., விசாரணை!
-
சர்ச்சைக்குரிய 'கயாப்' பதிவு: நீக்கியது காங்கிரஸ்
-
பஹல்காம் தாக்குதலுக்கு ராணுவ தளபதி நீக்கமா? அரசு விளக்கம்
-
இந்தியாவும், பாகிஸ்தானும் பாதுகாப்பை பேணுங்கள்: அமெரிக்கா, ஐ.நா., வலியுறுத்தல்
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து எதிரொலி: வறண்டு கிடக்கின்றன பாக்., அணை