சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து எதிரொலி: வறண்டு கிடக்கின்றன பாக்., அணை

4

புதுடில்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ததால், பாகிஸ்தானில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை வறண்டு கிடக்கும் செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளன. இதுபோல, கார்கில் அருகே சிந்து மற்றும் அதன் கிளை நதியான ஜன்ஸ்கார் ஆகியவை வாய்க்கால் போல மாறி வருகின்றன.


ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் புகுந்து அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேரை சுட்டுக் கொன்றதையடுத்து, பாக்., உடன் 1960ல் போடப்பட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.


அப்போதைய பிரதமர் நேரு ஆட்சியில் போடப்பட்ட அந்த ஒப்பந்தப்படி, ஆறு நதிகளின் மொத்த தண்ணீரை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிந்து, ஜீலம், செனாப் ஆகிய 70 சதவீதம் நீரைக் கொண்ட மூன்று ஆறுகளின் கட்டுப்பாடு பாகிஸ்தானுக்கும் பியாஸ், ரவி, சட்லெஜ் ஆகிய 30 சதவீதம் நீரைக் கொண்ட முன்று ஆறுகளின் கட்டுப்பாடு இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.


அதன்பிறகு, பாக்., உடன் 1965, 1971ல் நடந்த போர்கள், கார்கில் போர், 2016ல் உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல், 2019ல் புல்வாமா தாக்குதல் என நடந்தபோதிலும் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை.


தற்போது பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணியரை தேடித் தேடி சுட்டுக் கொன்றதால், கடும் கோபமடைந்த மத்திய அரசு, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனால், உலகிலேயே மிகவும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடுகளில் ஒன்றான பாக்., பரிதவிப்பான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


இந்தியாவின் அதிரடியால், கார்கில் அருகே சிந்து நதி மற்றும் அதன் பிரதான கிளை நதியான ஜன்ஸ்கர் ஆகியவை வறண்டு கிடக்கின்றன. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், அவற்றை படம் பிடித்துள்ளனர். இதுபோல, பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட் அருகே, செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளமராலா அணையும் ஒரே வாரத்தில் வறண்டு போனது.


இது தொடர்பான செயற்கைக் கோள் படத்தை நம் ராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற கர்னல் விநாயக் பட் வெளியிட்டுள்ளார்.


ஏப்.21 மற்றும் ஏப்.26 ஆகிய தேதிகளுக்கு இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட படங்களில், அனைத்து மதகுகளிலுமே தண்ணீர் மெலிதாக வழிந்தோடுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளும் வறண்டு போய், பாளம் பாளமாக வெடிக்கும் நிலையில் உள்ளன.


'சிந்து நதி ஒப்பந்தம் ரத்தானதன் விளைவு இது,' என குறிப்பிட்டுள்ள அவர், 'இனி வரும் காலங்களில் அதிக வெள்ளம் அல்லது கடும் வறட்சியை பாக்., எதிர்கொள்ள நேரிடும்' எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement