பத்மஸ்ரீ விருது பெற்ற 'தினமலர்' ஆர்.லட்சுமிபதிக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை : பத்மஸ்ரீ விருது பெற்ற, 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: 'சமன் செய்து, சீர்துாக்கும் கோல் போல்' என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, பத்திரிகை தர்மத்தை கடைப்பிடித்து வருவதற்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும், 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, ஜனாதிபதியிடம் இந்திய நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, பத்மஸ்ரீ விருதை பெற்றது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த விருது அவரது பல்லாண்டு கால அர்ப்பணிப்புக்கும், தன்னலமற்ற சேவைக்கும் கிடைத்த விருது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்த விருதை பெற்றதற்கு பாராட்டுகள். மேலும் பல விருதுகள் பெற்று, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.
எர்ணாவூர் ஏ. நாராயணன்:
'தினமலர்' இணை ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி, பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் உயரிய விருதை பெற்றுள்ளதற்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழகத்திற்கு தமிழுக்கும், தமிழ் நாளிதழுக்கும், பெருமை சேர்க்கும் விதமாக, இது அமைந்துள்ளது. கல்வி மற்றும் பத்திரிகை துறையில், அவர் மேலும் சாதனைகள் புரிய, சமத்துவ மக்கள் கழகம் சார்பில், மனமார்ந்த பாராட்டுகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.