ரூ.300 கோடி கடன் வாங்கி சாலைகள் சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை : சாலை சீரமைப்பு பணிகளுக்காக, 300 கோடி ரூபாய்க்கு கடன் வாங்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, சென்னை மாநகராட்சி தகவல் தொழில்நுட்ப மையம் சார்பில், 'வாட்ஸாப்' தளம் உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, 237 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதில் பெரும்பாலானவை கழிப்பறை, பள்ளி, அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கும், புதிய கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது, இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ரேணுகா குறுக்கிட்டு பேசினார். அப்போது, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், ''தனியார் வசம் ஒப்படைத்தாலும், தற்போது பணியாற்றும் ஊழியர்களை அங்கேயே பணியமர்த்த வேண்டும். மாநகராட்சி பொதுக்கழிப்பறை பராமரிப்பு பணியும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் கால அளவு ஒன்பது ஆண்டுகளாக உள்ளது. அதை குறைக்க வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் சேட்டு பேசுகையில், ''சென்னையில் துாய்மை பணி 'ராம்கி' நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சரியாக பணி செய்வதில்லை. ஆட்கள் வராமலே, வந்ததாக கணக்கு காட்டுகின்றனர். இதை கேட்டால், அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மிரட்டுகிறார்,'' என்றார்.
அப்போது, 'நீங்கள் அதிக நேரம் பேசி விட்டீர்கள்' எனக்கூறி, மேயர் பிரியா மணி அடித்தார். தொடர்ந்து பேசிய கவுன்சிலர், ''என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது பற்றி மனவேதனையில் பேசுகிறேன்; நீங்கள் அமர சொல்கிறீர்கள்,'' என்றார். உடனே, மற்ற கவுன்சிலர்கள் அவரை அமரும்படியும், மைக்கை அணைக்க கோரியும் குரல் எழுப்பியதால், சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து தட சாலைகள், உட்புற தார் சாலைகள், சிமென்ட் கான்கிரீட் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இச்சாலை பணிகளுக்காக, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டத்தில் 100 கோடி ரூபாய், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக நிறுவனத்திடம் 80 கோடி ரூபாய் கடனாக பெறப்பட உள்ளது.
மேலும், சாலைகள் அமைத்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 120 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தம், 300 கோடி ரூபாய் கடன் மற்றும் மானியமாக பெற்று, சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகள் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி துவங்க உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலதன நிதியில் இருந்து 96 கோடி ரூபாய், சாலை சீரமைப்பு பணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டல சாலைகளில், கான்கிரீட் பூந்தொட்டிகள் அமைக்க, 5.80 கோடி ரூபாய் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தகவல் தொழில்நுட்ப மையம் சார்பில், 'வாட்ஸாப்' தளம் உருவாக்கப்படுகிறது. இதன் வாயிலாக பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், மேயர் பிரியா கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவில், 120 டாக்டர்கள் நியமிக்கப்படுவர். மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் தாமதமாக வருவதாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வாறு வரும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு