டி.பி.எல்., வீரர்கள் 'கெத்து' 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட்டில் அபாரம்

கோவை : 'தினமலர் பிரீமியர் லீக்' காலிறுதி போட்டியில் அணியின் வெற்றிக்காக அதிரடி காட்டியசிறுவர்கள், வெற்றி, தோல்வி பாராமல் எதிரணியினரின் திறமையை கொண்டாடினர்.
தினமலர் நாளிதழ் சார்பில், 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்', 'ஸ்காலர்ஸ் சொல்யூஷன்ஸ்', 'ஓ.கே., ஸ்வீட்ஸ்' பங்களிப்புடன், 11-17 வயதுடைய சிறுவர்களுக்கான 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி கடந்த, 28ம் தேதி துவங்கியது; நாளை நிறைவடைகிறது.
அரையிறுதிக்கு முன்னேற்றம்
டென்னிஸ் பந்து கொண்டு 'நாக் அவுட்' முறையில் நடத்தப்படும் இப்போட்டியில், மாவட்டத்தை சேர்ந்த, 32 அணிகள் பங்கேற்றன. இரு சுற்றுகளை அடுத்து நேற்று அவிநாசி ரோடு, சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில், காலிறுதி போட்டிகள் நடந்தன.
முதல் காலிறுதியில், நோ-11 அணியும், ரெய்சிங் ஸ்டார்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ரெய்சிங் ஸ்டார்ஸ் அணி, 10 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 90 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நோ-11 அணியினர், 8 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 92 ரன்கள் எடுத்து அரையிறுதிக்கு முன்னேறியது.
நோ-11 அணி வீரர் சச்சின் மூன்று விக்கெட்கள் வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். இரண்டாம் போட்டியில், கே.ஏ.டி., டர்ப் அணியும், பினிசிங் பால்கன்ஸ் அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த கே.ஏ. டி., டர்ப் அணியினர், 10 ஓவரில், 188 ரன்கள் எடுத்தனர். பினிசிங் பால்கன்ஸ் அணியினரோ, 10 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 49 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
80 ரன் எடுத்த செல்வா
கே.ஏ.டி., டர்ப் அணி வீரர் அகிலாண்டீஸ்வரன், 106 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, ரன்கள் குவித்த இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. மூன்றாம் போட்டியில், ஹோப்ஸ்-11 அணியும், வூல்ப் பேக் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வூல்ப் பேக் அணியினர், 10 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 125 ரன்களை குவித்தனர். 126 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய ஹோப்ஸ்-11 அணியினர், 10 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 45 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதில், 80 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த வீரர் செல்வாவுக்கு, கோயம்புத்துார் அபார்ட்மென்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கண்ணன், ஆட்ட நாயகன் விருது வழங்கினார். நான்காம் போட்டியில் தி லீக் லெஜண்ட்ஸ் அணியும், கோவை பிரதர்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, தி லீக் லெஜண்ட்ஸ் அணியினர், 10 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு, 72 ரன்கள் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய கோவை பிரதர்ஸ் அணியினர், 5.1 ஓவரில், 2 விக்கெட் இழப்புக்கு, 73 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். 25 ரன்கள் எடுத்த வீரர் பிரவீனிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இன்று அரையிறுதி போட்டி
காலிறுதி போட்டியில் விளையாடிய சிறுவர்கள், தங்களது அணியின் வெற்றிக்காக போராடினர். அதேசமயம், எதிரணியினரின் வெற்றி, தோல்வி பாராமல் ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொண்டனர். இன்று அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன.
இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டிகளில், ஜூனியர் அணியினரிடையே கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
பரிசும், பாராட்டும்!
போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரம், கோப்பை, இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம், கோப்பை, மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம், கோப்பை வழங்கப்படுகிறது. சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர், தொடர் நாயகன் விருது மற்றும் ஒவ்வொரு போட்டிக்கும் ஆட்ட நாயகன் விருது வழங்கப்படுகிறது.
மேலும்
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு