பா.ம.க.,வை உடைக்க தி.மு.க., திட்டம்: ஜி.கே.மணி மீது அன்புமணி ஆதரவாளர்கள் சந்தேகம்

சென்னை: சட்டசபையில், தி.மு.க.,வை புகழ்ந்து, பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பேசியதால், பா.ம.க.,வை உடைக்க, தி.மு.க., முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


கடந்த 30 நாட்கள் நடந்த, தமிழக சட்டசபை கூட்டம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் பா.ம.க., கவுரவத் தலைவரும், அக்கட்சியின் சட்டசபை குழு தலைவருமான ஜி.கே.மணிக்கு, பலமுறை பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம், தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் புகழ்ந்துரைத்தார்.


மார்ச் 20ல் சட்டசபையில் பேசிய ஜி.கே.மணி, 'தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்' என்றார். அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, 'தர்மபுரியில் சிப்காட் வேண்டும்' என்கிறார்.


அதில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில், சிப்காட் அமைப்பதை, பா.ம.க., எதிர்க்கிறது. அக்கட்சிக்கு இரட்டை நாக்கா' எனக் கேட்டார். அதற்கு ஜி.கே.மணி பதில் அளிக்கவில்லை. இதனால், கொந்தளித்த பா.ம.க., தலைவர் அன்புமணி, 'இரட்டை நாக்கா' என கட்சியை விமர்சிக்கும்போது, எப்படி அமைதியாக இருக்க முடிந்தது என, அவரிடமே கோபப்பட்டுள்ளார்.


ராமதாசிடமும் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 24ம் தேதி, 'கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலை அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கு பாராட்டு தெரிவித்து பேசிய ஜி.கே.மணி, 'கருணாநிதி பெயரில் பல்கலை அமைக்க, முதல்வர் ஸ்டாலினுக்கு தயக்கம் இருப்பதாக அறிந்தேன். எந்த தயக்கமும் தேவையில்லை. கருணாநிதி பெயரில் பல்கலை அமைக்க வேண்டும்' என்றார்.


இது பா.ம.க.,வினரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், சொந்த கட்சியினர், அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:



ஜி.கே.மணியின் சட்டசபை பேச்சு, கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. கருணாநிதி பல்கலை உள்ளிட்டவற்றை வரவேற்பதில் தவறில்லை. ஆனால், ராஜ விசுவாசத்தை காட்டுவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்ற, பா.ம.க.,வின் உயிர்நாடிக் கொள்கைகளை, ஒரு வரியில் சொல்லிவிட்டு, தி.மு.க.,வினரையே விஞ்சும் அளவுக்கு, ஜி.கே.மணி அரசை புகழ்ந்துரைத்தார்.


அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., மட்டுமல்லாது, நாம் தமிழர் அல்லது த.வெ.க., இணையும் வாய்ப்புள்ளதால், தி.மு.க., கதிகலங்கிப் போய் உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பா.ம.க., செல்வாக்கு உள்ள இடங்களில் தான், அ.தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வென்றது.


எனவே, ஜி.கே.மணியை பயன்படுத்தி, பா.ம.க.,வை உடைக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிடுகிறார் அல்லது பா.ம.க.,வை பலவீனப்படுத்துகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement