ஏழு ஜென்மம் எடுத்தாலும் தி.மு.க., ஆட்சிக்கு வராது டாக்டர் சரவணன் சாபம்

மதுரை: ''தி.மு.க., ஆட்சி 7வது முறை வராது. ஸ்டாலின் என்ற சொல் சாதனை சொல் அல்ல. மக்களுக்கு வேதனை சொல். ஒட்டுமொத்தமாக தமிழகத்தை ஸ்டாலின் அரசு சூறையாடி விட்டது'' என அ.தி.மு.க., மருத்துவப்பிரிவு இணைச் செயலாளர் சரவணன் குற்றம்சாட்டினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: சட்டசபையில் ஸ்டாலின் பேசும்போது தமிழகம் இன்றைக்கு எல்லா துறைகளிலும் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஸ்டாலின் என்றாலே சாதனை. தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் 7வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று பேசியுள்ளதை காமெடியாகவே பார்க்க முடிகிறது.

நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் இதுதான் சாதனை. டாஸ்மாக், மணல், மின் கொள்முதல், பொங்கல் பரிசு என எல்லா துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது.

அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, பன்னீர்செல்வம், சாத்துார் ராமச்சந்திரன் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. பெண்களை இழிவுபடுத்தி பேசிய பொன்முடியும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜியும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதேபோல் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம் என்ற நிலையை தி.மு.க., அரசு ஏற்படுத்தியுள்ளது.

தொழில் துவங்க ஏற்ற மாநில பட்டியலில் புதுச்சேரி கூட இடம் பெற்றுள்ளது.

தமிழகம் இடம்பெறவில்லை என்பது வேதனையாக உள்ளது. ஸ்டாலின் என்ற சொல்லை மக்களின் வேதனைச் சொல்லாகத்தான் பார்க்க முடிகிறது. இனி ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் தி.மு.க., ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது.

இவ்வாறு கூறினார்.

Advertisement