ஆரோவில்லில் செம்மொழி பயிலரங்கம்

வானூர் : ஆரோவிலில் நடந்த தமிழ் செம்மொழி பயிலரங்கில் டில்லி பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பன்முக மொழி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

ஆரோவிலில், மத்திய தமிழ் செம்மொழி நிறுவனம் மற்றும் டில்லி பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியில் செம்மொழி பயிலரங்கு 10 நாட்கள் நடந்தது. இதில் பஞ்சாப், வங்காளம், மணிப்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த 15 பி.எச்.டி., மாணவர்கள், 2 பஞ்சாபி பேராசிரியர்கள் உட்பட 5 ஆசிரியர்கள் இந்தி, சமஸ்கிருதம், பெங்காலி, மணிப்புரி மொழி வல்லுநர்கள், ஊடகவியல் படிக்கும் 5 எம்.ஏ மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சங்க இலக்கியத்தின் பன்முக ஆய்வு குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சிறுபாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களின் வரலாறு குறித்து விரிவான ஆய்வுகள், சங்க காலத்தில் பாணர்கள் மாட்டு வண்டியில் புதுச்சேரி பகுதிகளில் மேற்கொண்ட பயணங்கள் குறித்த ஆவண ஆய்வு, ஆரண்யா வனப்பகுதியின் செடி, கொடி, மலர்கள், மரங்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் குறித்த விவாதங்கள் நடந்தன.

ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் ஜெயந்தி ரவியுடன் நடந்த உயர்மட்ட சந்திப்பில் 'மொழி எல்லைகளைத் தாண்டிய இந்திய ஒற்றுமை'குறித்த ஆழமான உரையாடல்கள் நடந்தன. இதில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளின் இணைந்த வளர்ச்சி குறித்த விவாதங்கள் இடம் பெற்றிருந்தது.

Advertisement