சாக்கலூத்துமெட்டு ரோடு அமைக்க கோரி இன்று எம்.பி. தலைமையில் நடை பயணம்

தேவாரம்: சாக்கலூத்துமெட்டு ரோடு அமைந்திட தேவாரம் மலை அடிவாரத்தில் இருந்து சாக்கலூத்துமெட்டு வரை எம்.பி.,தங்கத் தமிழ்ச்செல்வன் தலைமையில் 25 கிராம மக்களின் கூட்டுக் குழு இன்று நடை பயணமாக சென்று கேரள எம்.பி., டீன் குரியகோஸ் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழக, கேரளாவை இணைக்கும் தேவாரம் சாக்கலூத்துமெட்டு ரோடு திட்டம் உள்ளது. கேரளா நெடுங்கண்டத்திற்கு தேவாரத்தில் இருந்து 50 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். உடும்பஞ்சோலை செல்வதற்கு 60 கி.மீ., தூரம் செல்ல வேண்டும். குறைந்தது 2 மணி நேரம் ஆகும். ஆனால் தேவாரம் மேட்டுப்பட்டியில் இருந்து சாக்கலூத்து மெட்டு வழியாக 22 கி.மீ., தூரம் உள்ள நெடுங்கண்டத்திற்கு அரை மணி நேரத்திலும், உடும்பஞ்சோலைக்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம். இதன் மூலம் 38 கி.மீ., தூரமும், ஒன்றரை மணி நேரமும் குறைகிறது.

கேரளா நெடுங்கண்டத்தில் இருந்து சாக்கலூத்துமெட்டு வரை ரோடு வசதி உள்ளது. ஆனால் தமிழக பகுதியான டி.மேட்டுப்பட்டி மலை அடிவாரத்தில் இருந்து 4 கி.மீ., தூரம் உள்ள சாக்கலூத்துமெட்டு செல்ல பாதை வசதி இருந்தும், ரோடு வசதி இல்லை. 43 ஆண்டுகளாக சாக்கலூத்து மெட்டு ரோடு திட்டம் வனத்துறையின் முட்டுக்கட்டையால் கிடப்பில் உள்ளன.

இது குறித்து தமிழக, கேரளா உள்ளாட்சி பிரதிநிதிகள், வர்த்தகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சாக்கலூத்துமெட்டு கேரளா, தேவாரம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 15 நாட்களுக்கு முன்பு உடும்பஞ்சோலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதனை தொடரந்து இன்று தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., தலைமையில் 25 கிராம மக்களின் கூட்டு குழு சார்பில் தேவாரம் டி.மேட்டுப்பட்டி மலை அடிவாரத்தில் இருந்து சாக்கலூத்துமெட்டு வரை நடை பயணம் மேற்கொள்கின்றனர்.

இவர்களை இடுக்கி மாவட்ட எம்.பி., டீன் குரியகோஸ் தலைமையில் கேரளா ஒருங்கிணைப்பு குழுவினர் வரவேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

Advertisement