பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கந்தர்பால் சம்பவத்தில் தொடர்பு; பகீர் தகவல்

4

புதுடில்லி: பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு, கடந்த 2024ம் ஆண்டு கந்தர்பாலில் நடந்த சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.


கடந்த ஏப்.,22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கச்சூடு நடத்தினர். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 26 பேர் உயிரிழந்தனர்.


நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் போட்டோக்களையும் வெளியிட்டு என்.ஐ.ஏ., விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளோடு, பயங்கரவாதிகள் சகஜமாக உலம் வந்த வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் கசிந்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 2024ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கந்தர்பால் மாவட்டத்தில் நடந்த தேசிய நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு மருத்துவர் மற்றும் 6 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு, கந்தர்பாலில் நடந்த தாக்குதல் சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இரு தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கந்தர்பால் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜூனைத் அகமத் பட் என்ற பயங்கரவாதி உள்பட 3 பேர் அடையாளம் காணப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த நிலையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹசிம் முசா, பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதை உளவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Advertisement