ஒருத்தரையும் விட மாட்டோம்; தக்க பதிலடி கொடுப்போம்; அமித் ஷா சூளுரை

14

புதுடில்லி: பஹல்காமில் இந்திய மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக அமைச்சர் அமித் ஷா இதுபோன்று பேசியுள்ளார்.


மேலும் அவர் கூறியதாவது; பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த நாட்டுக்குமே துயரமான நிகழ்வாகும். பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்து கொள்ளாது என்பதை அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.


இந்தக் கோழைத்தனமான தாக்குதலை அவர்களின் (பயங்கரவாதிகள்) வெற்றியாக பார்ப்பவர்கள், மனதில் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இழப்பிற்கும் தக்க பதிலடி கொடுப்போம். இது பிரதமர் மோடியின் ஆட்சி. ஒருத்தரையும் சும்மா விட மாட்டோம். நாட்டின் எந்த மூலையிலும் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம். அதன் வேரில் இருந்து அடியோடு அகற்றுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement