ஜிஎஸ்டி வசூலில் புது உச்சம்: ஏப்., மாதம் ரூ.2.36 லட்சம் கோடி வசூல்

புதுடில்லி: கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூலானது இதுவரை இல்லாத அளவாக 2.36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஏப்., மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.36 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்., மாதம் வசூலான 2.10 லட்சம் கோடி ரூபாயை காட்டிலும் 12.6 சதவீதம் அதிகம் ஆகும்.
உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைத்த வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்து 1.89 லட்சம் கோடி ரூபாயாகவும், இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் 21 சதவீதம் அதிகரித்து 46,900 கோடி ரூபாயாகவம் உள்ளது.
ஏப்., மாதம் வசூலான ஜிஎஸ்டியானது. பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதை காட்டுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் 2025ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய வரி வருவாயாக ஜிஎஸ்டி உள்ளது. மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் 28 சதவீதம் ஜிஎஸ்டி மூலமே கிடைக்கிறது. இந்தாண்டு ஜிஎஸ்டி மூலம் 11.8 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.


