பஸ்சை நிறுத்தி தொழுகை; டிரைவர் 'சஸ்பெண்ட்'

13

பெங்களூரு : கர்நாடகாவில், அரசு பஸ்சை நிறுத்திவிட்டு தொழுகை நடத்திய டிரைவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து ஹாவேரிக்கு கடந்த ஏப்., 29ம் தேதி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவர் முல்லா, திடீரென பஸ்சை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, காலியாக கிடந்த பயணியர் இருக்கையில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டார்.


இதை பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, வடமேற்கு சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரியங்காவுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி எழுதியுள்ள கடிதம்:


ஹூப்பள்ளியில் இருந்து ஹாவேரிக்கு சென்ற பஸ்சை, டிரைவர் சாலை ஓரம் நிறுத்தி தொழுகையில் ஈடுபட்டுள்ளார். இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.


அரசு ஊழியர்கள், பணி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரத்துக்கு உரிமை உண்டு. ஆனாலும், பொது சேவையில் இருப்போர், உத்தியோக கடமைகளுக்கு வெளியே தங்கள் மதத்தை பின்பற்றலாம்.


எனவே, பணி நேரத்தில் பஸ்சை நடுவழியில் நிறுத்தி, பயணியர் இருக்கும் போது தொழுகையில் ஈடுபட்டது ஆட்சேபனைக்கு உரியது. இது தொடர்பாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.


இதையடுத்து, தொழுகையில் ஈடுபட்ட டிரைவர் முல்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்த, போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

Advertisement