மதுரை வீரன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு



கரூர் . க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குப்பம் அருகில் உப்புபாளையத்தில் மதுரைவீரன் சுவாமி கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேம் கடந்த மாதம், 12ல் நடந்தது. தொடர்ந்து, 48 நாள் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது.

இதையொட்டி ராமேஸ்வரம் பகுதிக்கு சென்று, புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். விநாயகர், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் உடனுறை மதுரைவீரன் சுவாமி, கருப்பண்ணசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் ஊற்றி அதில் மலர்கள் துாவி விநாயகர் வழிபாட்டுடன் ஹோமம் துவங்கியது.
கணபதி ஹோமம், மகாலட்சுமி, மதுரை வீரன், நவக்கிரக மற்றும் ஸ்ரீசூக்தம், துர்கா சுதர்சன மூலமந்திர ஹோமம், 96 வகையான திரவிய பொருட்களால் சன்னதி ஹோமங்கள் நடத்தப்பட்டன. பூர்ணாஹூதியை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement