பாகிஸ்தானுடன் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா வேண்டுகோள்

6

புதுடில்லி: பாகிஸ்தானுடனான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனாலும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்கும் வரை ஓயப்போவதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


ஜம்மு -- -காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்தியா - பாக்., இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது.


அறிவுறுத்தல்



பஹல்காம் தாக்குதலில் நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாக்., அறிவித்தது. ஆனால், பாக்., கூறுவதை நம்புவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை.


இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுபோல, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீபையும் தொடர்பு கொண்டார்.


இந்த தகவலை தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ், ''இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு வருத்தத்தை தெரிவித்த மார்கோ ரூபியோ, பாக்., உடன் இணைந்து பதற்றத்தை தணிக்கும்படி கேட்டுக் கொண்டார்.


''இதுபோல, தெற்காசியாவில் பதற்றத்தை தணித்து, நேரடி தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தி, இந்தியாவுடன் அமைதியை பேணும்படி, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீபிடமும் மார்கோ ரூபியோ வலியுறுத்தினார். பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு பாக்., அதிகாரிகள் ஒத்துழைக்கும்படியும் அறிவுறுத்தினார்,'' என்றார். ஆனால், மார்கோ ரூபியாவின் வேண்டுகோளை இந்தியா ஏற்க மறுத்து விட்டது.


இது தொடர்பாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ''அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசியபோது, எல்லை தாண்டி வந்து பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அதற்கு சதித் திட்டம் தீட்டியவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் என அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு உறுதியாக தண்டிக்கப்படுவர் என தெரிவித்தேன்,” என்றார்.

உத்தரவாதம்



இதுகுறித்து, நம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பதான்கோட் தாக்குதலை போலவே, இந்த முறையும் 'பாரபட்சமற்ற விசாரணை' என்ற வார்த்தைகளுடன் உலக நாடுகளை பாக்., நாடுகிறது. ஆனால், கடந்த கால அனுபவத்தை கருத்தில் வைத்து, எந்தவொரு முன் உத்தரவாதத்துக்கும் இந்தியா உடன்படாது' என்றனர்.


இதற்கிடையே, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ டாவ் யுல் உடன் தொலைபேசியில் நேற்று பேசினார்.


அப்போது, பாக்., பயங்கரவாதிகள் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதல் குறித்தும், பயங்கரவாதத்தை பூஜ்யம் அளவுக்கு கூட பொறுத்துக்கொள்ள முடியாது என்ற இந்தியாவின் கொள்கை பற்றியும் ஜெய்சங்கர் விவரித்தார்.

அமெரிக்க ராணுவ அமைச்சர் உறுதி



அமெரிக்க ராணுவ அமைச்சர் பீடே ஹெக்செத், நேற்று நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ''பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் பயிற்சி அளித்து, உலகளாவிய பயங்கர வாதத்தைத் துாண்டிவிட்டு, பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் முரட்டு நாடாக, பாக்., அம்பலப்பட்டு நிற்கிறது,'' என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதையடுத்து, ''பயங்கரவாதத்திடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையை அமெரிக்கா முழு மனதோடு ஆதரிப்பதோடு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும்,'' என பீடே ஹெக்செத் உறுதி அளித்தார்.

Advertisement