பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு

30

திருவனந்தபுரம்: "முதல்வர் பினராயி விஜயனும், சசி தரூரும் பங்கேற்றதால் பலர் தூக்கத்தை இழப்பார்கள்" என விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசினார்.


கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைத்துள்ளது. இந்த துறைமுகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்து பேசியதாவது:

விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் நான் இந்த துறைமுகத்தை தொடங்குகிறேன். அவர்களின் இழப்பு, தேச விரோத மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளிடமிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.


முதல்வர் பினராயி விஜயன் இண்டி கூட்டணியின் முக்கியமான தூண். பினராயி விஜயனும், சசி தரூரும் பங்கேற்றதால் பலர் தூக்கத்தை இழப்பார்கள். முன்னர் வெளிநாடுகளில் செலவிடப்பட்ட நிதிகள் இப்போது உள்நாட்டு வளர்ச்சிக்குச் செலவிடப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


பின்னர் கேரள முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பேசியதாவது, "துறைமுகத்தைத் திறந்து வைக்க வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை கேரள அரசும், என் சார்பாகவும் அன்புடன் வரவேற்கிறேன். இது நம் அனைவருக்கும் பெருமையான தருணம்.


பிரதமரின் வருகை இந்த நிகழ்வை இன்னும் சிறப்பானதாக்குகிறது. மேலும் நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இது இந்தத் துறைமுகத்தின் பிரகாசமான எதிர்காலம் குறித்து எங்களுக்கு நம்பிக்கையையும் தருகிறது" என்றார்.

Advertisement