'நீட்' வினாத்தாள் கசிந்ததாக புரளி வலைதள கணக்குகள் மீது நடவடிக்கை

1

புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததாக, போலி தகவல் பரப்பிய 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்குகள் மீது தேசிய தேர்வு முகமை புகார் அளித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகியவற்றில் சேர, நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.

இந்தாண்டுக்கான தேர்வு நாளை மறுநாள் நாடு முழுதும் நடக்கிறது. தேர்வில் எந்த குளறுபடியும் நடக்காமல் இருக்க, மத்திய கல்வி அமைச்சகம், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் உடன் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது.

மேலும், தேர்வு தொடர்பான புகார்களுக்கு என தேசிய தேர்வு முகமை பிரத்யேக இணையதளத்தை துவங்கியுள்ளது.

அதில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் வினாத்தாள் கசிந்ததாக புகார் அளித்திருந்தனர்.

இது தொடர்பாக விசாரித்த தேர்வு முகமை, டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் வாயிலாக இத்தகைய பொய் செய்தி பரவியதை கண்டுபிடித்தது.

பொய் செய்தி பரப்பியதாக, 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் கணக்குகளின் விபரங்களை திரட்டி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணைய குற்றங்களுக்கான மையத்திடம் வழங்கியுள்ளது.

அவர்கள் அந்தந்த கணக்குகளின் அட்மின்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு தொடர்பான பொய் செய்திகளை தடுக்கும்படி, சமூக வலைதள நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement